இளங்கோதை

“நானும் கூட வரவா?”
“இல்ல வேண்டாம், நான்
போயிருவேன்”
“இருட்டா இருக்கு, இன்னும் ஒரு
கிலோ மீட்டர் போவணும். ஒத்தயில
போயிருவியா? நானும் கூட
வாரேனே”
“இல்ல நான் போயிடுவேன்”
என்று விருட்டென நடையை
கட்டினாள் கோதை.
தார்ச்சாலை, சாலையின்
இருபுறங்களிலும் கள்ளிச் செடிகள்,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள்,
வானம் முழுக்க படர்ந்த நட்சத்திரங்கள்
மின்மினிப் பூச்சி போல்
மின்னுகின்றன, இரு பாதியாக
வெட்டிய இளநீரைப் போல் நிலா,
கூடடைந்த பறவைகளின் சப்தங்கள்
எங்கோ கேட்கிறது,
கள்ளிச்செடிகளில் தஞ்சம் புகுந்த
வண்டுகள் ரீங்காரமிடுகிறது.
இவை எதிலும் கவனமில்லா கோதை
விருவிருவென நடந்துகொண்டே
இருந்தாள்.
குளிர்ந்த காற்று முகத்தில்
வீசுகிறது அவள் முகம் வெப்பத்தில்
தகிக்கிறது. தலையில் ஏதோ
பெருஞ்சுமை இருப்பது போல்
பாரமாய் இருந்தது, உடலெங்கும்
மெலிதாய் நடுங்கியது, இதயம்
சற்று அதிகமாகவே துடித்தது.
இன்னும் வேகமெடுத்து
முன்னோக்கி நடந்தாள். அவள்
நினைவுகள் பின்னோக்கி
நகர்ந்தன…
*********************
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓர்
ஆலை.
கடல் மணலை ஈரம் சொட்டச் சொட்ட
அள்ளி வந்து, கருவிகள் மூலம் உலர
வைத்து தரம் பிரித்து,
மூட்டையிலடைத்து
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
செய்யும் அரசி(யல்வாதிகள்)
அனுமதியோடு இயங்கும் ஆலை.
ஆண்கள், பெண்கள் என்ற
பாகுபாடில்லாமல் அனைவரும்
ஒன்றாக பணி செய்தனர்.
ஒரு நாள் வேகமாக வேலை
செய்துகொண்டிருந்த போது
மிடுக்காக உடையணிந்து, ஓங்கி
உயர்ந்த, ஒருவன் வந்து அவர்கள்
வேலை செய்வதையே
பார்த்துக்கொண்டிருந்தான்.
இவர்கள் எவரும் அவனை
கவனிக்காதது போலவே பணியை
தொடர்ந்துகொண்டிருந்தனர்.
“எத்தே யாருத்தே இவன், ஆள பாத்தா
ஒரு தினுசா மொரட்டு ஆளா
இருக்கான். என்னையவே மொறச்சி
பாக்குறாப்ள இருக்குத்தே” என்று
கேட்டாள் கோதை.
இங்கு பணிக்கு சேர்ந்த நாள்
முதலே அத்தைதான் கோதைக்கு
உற்ற தோழி. 50 வயதிருக்கும்
அத்தைக்கும் கோதைதான் ஒரே
தோழி. ஏதோ தூரத்து உறவின்
முறையை தோண்டி எடுத்து
அதற்கு அத்தை என்று பெயர் சூட்டி
அழைத்து மகிழ்கிறாள்.
“ஏட்டி கோத…அவன் ஒன்னய
மட்டுமில்லட்ட எல்லாரையும்தான்
குருகுருனு பாக்கான்”
கிடுகிடுவென்ற கருவிகள்
இரைச்சலிலும் கோதையும்,
அத்தையும் கமுக்கமாக
பேசிக்கொண்டிருந்தனர் மணல்களை
கைகளால் உலர்த்தியவாறே…
பிரமாண்ட திருமண அரங்கம் போன்ற
ஒரு கட்டிடத்தில் ஐந்தாறு ராட்சத
கருவிகள் பொருத்தப்பட்டு ஆலை
இயங்கிக்கொண்டிருந்தது. திடீரென
அத்தனை கருவிகளும் இயங்குவது
நின்றது.
பெருமழை பொழிந்து ஓய்ந்தது
போன்ற நிசப்தம் நிலவியது ஆலை
முழுவதிலும்…
மேலாளர் ஒருவர் வந்து “,இங்க
பாருங்கமா… இவர் பேரு இளங்கோ,
இவர்தான் புதுசா வந்துருக்குற
சூப்பரேசர், பாத்து கவனமா
வேலைய பாருங்க” என்று தன்
உரையை முடித்தார். கருவிகள்
இயங்க ஆரம்பித்தது.
இளங்கோவும், மேலாளரும்
அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர்.
நாட்கள் சில நகர்ந்தோடியது.
பல பேர் மத்தியிலும் இளங்கோவின்
பார்வை கோதையின் மீது விழுதல்
கூடிக்கொண்டே வந்தது.
கோதையும் கவனித்தேதான்
இருந்தாள்.
அங்கு வேலை செய்யும் பெண்களில்
கோதை சற்று வடிவானவள்.
ஏழ்மையான ஆடையையும்
பளிச்சென்று உடுப்பவள், அளவாகப்
பேசி, தானுண்டு தன்
வேலையுண்டு என இருப்பவள்.
வரும் மேலதிகாரிகள் முதல் சக
ஊழியர்கள் வரை கோதையிடம்
சிமிட்டும் கண்கள் பலவற்றை பார்த்து
சட்டையில் பட்ட தூசியை தட்டுவது
போல் உதரிவிட்டுச் செல்பவள்.
கோதைக்கு இது புதிதல்ல,
இளங்கோவும் அவள் பார்த்த பல
கழுகுகளில் ஒருவன்தான்.
ஆலைக்கு வெளியே சில
வேப்பமரங்கள் உண்டு. அதன்
நிழலில்தான் மதிய உணவு உண்பது
வழக்கம் கோதைக்கும் அத்தைக்கும்.
அன்றொருநாள் இருவரும் வேம்படி
நிழலில் அமர்ந்து உண்ண
ஆயத்தமாயினர்.
இளங்கோ அங்குமிங்குமாக
அலைந்து கொண்டிருந்தான்.
“ஏட்ட கோதை இவன் ஏம்ட்ட அங்கேயும்
இங்கேயுமா குட்டி போட்ட நாயி
மாதி லாந்தியான்?”
“அட விடுங்கத்த… அவன
எட்டிப்பாக்காதீங்க”
“பாவம்ட்ட சாப்டாம அலையுதான்.
என்னனு கேப்போம்”
என்று கூறி…
“… எளங்கோ சார், என்னாச்சாச்சு
சாப்பிட போவாம இங்கனயே
சுத்துறீங்க?”
என்றாள் அத்தை
“அட அது ஒன்னுமில்லமா…”
“சார் இங்க வாங்க”
சற்று தயங்கியவாறே அருகில்
வந்தான் இளங்கோ…
“தெனசரி இந்நேரமெல்லாம் கார
எடுத்துட்டு சாப்பிட போவீங்க,
இன்னைக்கு என்னாச்சு?”
“இன்னைக்கு அந்த ஊர்ல கோயில்
கொடையாம். ஓட்டல் தெறக்கல”
“வாங்க, இருங்க ஆளுக்கொஞ்சமா
சாப்பிடுவோம்”
“இல்ல வேண்டாம்மா, வவுறு செத்த
மந்தமாவே இருக்கு…”
“சார் உக்காருங்க சார்”
என்று கூறியவாறே தன் சோற்று
வாளியை திறந்து அதன் மூடியில்
இரண்டு பிடி சோறள்ளி வைத்தாள்
அத்தை.
கோதையும் தன் பங்குக்கு ஒரு
பிடி சோறு வைத்தாள்.
குழம்புகள் ஊற்றப்பட்டது,
தயங்கியவாறே அமர்ந்தான் இளங்கோ.
மிக பவ்யமாக வாங்கி நாசுக்காக
உண்டான்.
“கோதை ஏன் எதுவுமே பேச
மாட்டேங்குறா? கல்யாணமாயிருச்ச
ா? வூட்டுக்காரர் என்ன பண்றாரு?”
“கல்யாணமாயி பாட்ட தொலச்சாச்சு”
என்றாள் அத்தை.
கோதை அத்தையின் தொடையை
பிடித்து கிள்ளினாள் ‘எதுவும்
சொல்லிவிடாதே’ என்பது போன்று.
“என்னம்மா இப்டி சொல்ற ஒரு
எளந்தாரி புள்ளய போயி…”
என்றான் இளங்கோ…
கோதை வாயில் வைத்த
பருக்கையை மென்று முழுங்கிய
வாறே சொன்னாள்,
“19 வயசுல பெத்தவங்க சொல்லு
கேக்காம காதலிச்சவனையே
கல்யாணம் பண்ணேன்.
25 வயசுல குடிச்சி குடிச்சே ஈரல்
அவிஞ்சு செத்து போயிட்டாவ…”
“ம்… அப்றம்…”
“அப்றமென்ன அப்றம் 4 வயசு பொம்பள
புள்ளயோட நிம்மதியாதான்
வாழுறேன்”
“இங்க எவ்ளோ சம்பளம் தரானுவ?”
“ஐயாயிரம் ரூவா”
“லீவு போட்டா சம்பளம்
பிடிப்பானுவளே?”
“ஆமா லீவு போட மாட்டேன்.
கஷ்டப்பட்டுடேனேனு எவளும்
கல்யாணத்துக்கும் காடு தர
மாட்டாளுவ, எவளாவது தந்தாலும்
நான் போமாட்டேன். ஆ…மா
மூலிக்கு முகூர்த்த வூட்ல என்ன
வேலை… கோயில் கொடைக்கும்
வரி குடுக்க மாட்டேன். வாங்குற
சம்பளத்துல மூவாயிரம் ரூவா
வாயிக்கும் வயித்துக்குமே
போயிரும், ஒரு அம்பதாயிரம் ரூவா
சீட்டு போட்டுருக்கேன். இது
போதும்…”
பேச்சின் முடிவில் மூவரும் உண்டு
முடித்தார்கள். சற்று இறுக்கமாகவே
இளங்கோ விடைபெற்றான்.
நாட்கள் சில சென்றது.
இளங்கோவின் அவள் மீதான
பார்வையில் இப்போது கனிவு
கலந்திருந்தது. இப்போதெல்லாம்
கோதையிடமும், அத்தையிடமும்
அவன் எந்த வேலையும்
சொல்வதில்லை. அவ்வப்போது
இருவரும் சந்திக்கையில் சிறு
புன்னகைப் பூக்கள் உதிர்கிறது.
“ஏட்டி கோதை, என்ன ஒரு மாதிரி
உம்முனு இருக்கா…?”
“கோயில் கொட வருது,கோயில
எடுத்து கட்ட போறானுவளாம். ஒரு
குடும்பத்துக்கு ஆயிரம் ரூவா
மடக்கு வரி போட்டுருக்கானுவ”
“நீதான் வரி குடுக்க மாட்டியே
பொறவென்ன..?”
“இல்லத்தே… நம்ம காலத்தோடு
முடியுற விசயமில்ல இது.
நாளைக்கே எம்மொவா வளந்து
சாமி கும்புட போனாலும் இந்த
சாதிகெட்ட பயலுவ கைய பிடிச்சு
வெளிய இழுத்து
போட்டுருவானுவளேனுதான்
யோசிக்கிறேன். ஒரு ஆயிரம்
ரூவாய குடுத்து
போட்டுட்டோம்னா நாளைக்கு
நமக்கும் உரிமை இருக்குனு அங்கன
போயி நின்னுக்கலாம்… ம்ஹும் நம்ம
படுய பாட்டுக்கு ஒனக்கு சாமி ஒரு
கேடானு கேக்குறாப்ள இருக்கு…”
“சங்கடப்படாம இரும்மா… மரத்த வச்சவன்
தண்ணி ஊத்தலேனா மழ பெஞ்சி
ஊத்தும். ஒம்பாட்டுக்கு இரு…”
ஓரிரு நாட்கள் கழித்து உணவு
இடைவேளையின் போது,
“ஏ… மருமொவளே ஆயிரம் ரூவா
வேணும்னால்லா நான் தாரேன்
பொறவு ஒங்கிட்ட இருக்கும் போது
தா…”
“நீங்க படுய பாடே பெரும்பாடு
ஒங்ககிட்ட எப்படித்தே ஆயிரம்
ரூவா…”
“சொல்லியேனு கோவப்படாத
எளங்கோ சார் ஒன்னய பத்தி அப்பப்ப
விசாரிப்பாரு, நேத்து
பேசிட்டிருக்கும் போது
சொன்னேன். இன்னைக்கு தந்து
‘குடு’னாரு”
“நீங்க ஏம்த்தே அவர்டலாம் சொல்றீய?
தேவையில்லாத வேலை
ஒங்களுக்கு.. எனக்கு வேண்டாம்
அவர்ட்ட குடுத்துருங்க”
சற்று சிவந்த முகத்தோடு
சினத்துடனே சொன்னாள் கோதை.
“ஏ சில்லாட்டப் பயவுள்ளா அவரும்
ஒன்னய மாதிரிதான். பாவம்
பொஞ்சாதி செத்துப் போயி
தனியாதான் வாழுறாராம். ஒரு
ஆம்பள புள்ள இருக்காம், வேற
கல்யாணமே வேண்டாம்னு
தனியாதான் வாழுறாராம். நல்ல
மனுசன் ஒதவி மனப்பான்மை
உள்ளவரு. நீ வாங்கிக்க பொறவு
நம்மகிட்ட இருக்கும் போது
குடுத்துருவோம்”
அவளால் வாங்கவும் முடியவில்லை,
மறுக்கவும் மனமில்லை, பணம்
தேவை என்பதை விட இளங்கோ மனம்
நோகக்கூடாது என்பதற்காகவே
வாங்கிக்கொண்டாள்.
நாட்கள் சில சென்றது. அத்தை
போன்று இளங்கோ மீதும் நல்ல
அபிப்ராயம் உண்டானது. தன்னைச்
சுற்றி இடப்பட்ட நெருப்பு
வேலியில் இளங்கோவுக்கு மட்டும்
ஒரு தாழ்வாரத்தை திறந்துவிட்டிரு
ந்தாள்.
இளங்கோ பார்ப்பது போன்றே
இவளும் பார்க்கத் துவங்கினாள்.
பிற ஆண்களை விட இளங்கோ மிக
நாணயமானவன். பேச வேண்டிய
விஷயம் தவிர்த்து ஒரு வார்த்தை
கூட கூடுதலாக பேச மாட்டான்.
அந்த ஆயிரம் ரூபாய் குறித்து
இதுவரை கோதையிடம் கேட்டதே
இல்லை.
கோதை ஊருக்கும் பணி செய்யும்
ஆலைக்குமான தூரம் ஏறத்தாழ
நான்கு மைல்கள். அவள்
ஊரிலிருந்து காலை எட்டு
மணிக்கு வரும் பிரத்யேக
சிற்றுந்துதான் அன்றாட பயண
வாகனம்.
ஒரு நாள் சிற்றுந்திலிருந்து
இறங்கி வரும் வழியில் இளங்கோ
நின்றான்.
“என்ன சார் இன்னைக்கு நேரமே
வந்துட்டீங்க போல..”
வெறும் புன்னகை கலந்த
தலையசைப்பு மட்டுமே
இளங்கோவிடமிருந்து பதிலாக
வந்தது.
“சார் இன்னும் ஒரு மாசத்துல சீட்டு
முடியுவு, அதுக்கு அடுத்த மாச
சம்பளத்துல ஒங்க ஆயிரம் ரூவாய
தந்துருவேன்”
“என்ன கோதை இப்டி சொல்லுற…
ஒங்க வூட்டுக்காரர்ட்ட
வாங்கினாலும் நீ திருப்பி
குடுத்துருவியா…?”
கோதை சட்டென தலை நிமிர்ந்து
பார்த்தாள். “என்ன சார் லூசு
மாதிரி பேசுறிய…”
என்று சொல்ல வந்தவளை
இடைமறித்து…
“சாரி சாரி கோதை. உங்க வூட்ல
உள்ளவங்கனு சொல்றதுக்கு பதிலா
வூட்டுக்காரர்னுட்டேன்”
காட்டமற்ற கோபம் களைந்து
“பரவால சார். பதறாதீங்க..”
என்று மிகையாவே சிரித்தாள்.
ஒரு கபடமற்ற வெள்ளந்தியாக
தலையை சுரண்டிய வாறே
சென்றான் இளங்கோ. அன்று
முழுவதும் இளங்கோவை பார்க்கும்
போதெல்லாம் வெடித்துச்
சிரிப்பாள்.
அதன் பிறகும் அன்றாடம்
இளங்கோவை தேடிப்பிடித்து
ஆத்மார்த்தமான சிரிப்பை உதிர்த்த
பிறகே பணியைத் தொடருவாள்.
பல நாட்களாக இருளடைந்த கோதை
மனதிற்குள் சாளரத்தின் வழியாக
சூரியக் கீற்று வந்து எட்டிப்பார்க்கி
றது, புழுங்கி வெந்த அவள்
நெஞ்சத்தில் பூங்காற்று வந்து
வருடுகிறது.
இளங்கோவோடு இப்போதெல்லாம்
வெட்கச் சிணுங்களோடு
பேசுகிறாள், அவனிடம் பேசுவதை
பிறர் பார்க்கிறார்களா என்று
கவனிக்கிறாள்.
அவன் பிற பெண்களிடம் பேசினால்
மனம் வாடுகிறாள்…
மாதம் பிறந்தது. மாலை ஆறு
மணிக்கு வேலை முடிந்த நேரம்
அனைவருக்கும் சம்பளக் கவர்
வழங்கப்பட்டது.
கோதையின் சம்பளக்கவரை
பிரத்யேகமாக இளங்கோ கொண்டு
கையில் கொடுத்தான்.
சிற்றுந்தில் வீட்டுக்குச் செல்லும்
சில நிமிட பயணம் முழுக்க ‘இவரு
ஏன் எங்கிட்ட தனியா கொண்டு வந்து
குடுத்தாரு…’ என்ற ஆழ்ந்த
சிந்தனையிலிருந்தாள். கவரை
பிரிக்கவே இல்லை. அச்சம், நாணம்,
படபடப்பு என அனைத்தும் இதயத்தில்
நடனமாடியது.
வீட்டுக்குச் சென்று குழந்தையை
எடுத்து முத்தமிட்டு உடைமாற்றக்
கூட பொறுமையிழந்து
சம்பளக்கவரை பிரித்தாள்.
ஐயாயிரம் ரூபாயும் ஒரு
வெள்ளைக் காகிகதமும் இருந்தது.
காகிதத்தை திருப்பினாள்.
“எப்படி சொல்வதென்று
தெரியவில்லை, என் நிலை நீ
அறிந்திருப்பாய்.
மனதை திடப்படுத்திக்கொண்டு
சொல்கிறேன். நான் உன்னை
விரும்புகிறேன். உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன். உனக்கு
விரும்பமில்லையெனில் கடிதத்தை
கிழித்துவிடு எவரிடமும்
சொல்லாதே.”
படித்த மாத்திரத்தில் இதயத்தில்
படபடப்பு கூடியது.
பக்கத்தில் நான்கு வயது பெண்
குழந்தை. கையில் வருங்காலத்தை
வளமாக்கும் கடிதம்.
‘என்னை மனைவியாக
ஏற்றுக்கொள்வான் என்
குழந்தையை…? அவன் குழந்தையாக
ஏற்பானா? அவன் மகன் என்னோடு
ஒட்டுவானா? என் கடந்த காலத்தை
சுட்டிச் சுட்டிச் சுடுபவனாக
இருந்தால்? அவனை பார்த்தால்
அப்படி தெரியவில்லை. அவனை
முற்று முழுதாய் பிடித்திருக்கிற
து. சமூக கட்டமைப்புகள், ஒவ்வாமை
உளவியல்கள் ஆகியவைதான்
அச்சமூட்டுகிறது. வானுமில்லா
பூமியுமில்லா திருசங்கு சொர்க்க
சிம்மாசனத்தில் அமர்ந்ததைப் போன்ற
மனநிலை.
இரவு நெடுநேரம் உறங்காமல்
சிந்தையிலேயே இருந்தாள். பின்பு
எப்போது உறங்கினாளென்றே
தெரியாது
அன்றைய இரவு மிக கடுமையாகக்
கழிந்தது.
காலையில் சிற்றுந்தில் ஓர்
இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
சாலைக் கரையோரம் கடந்தோடும்
கள்ளிச்செடிகளையும், கருவேல
மரங்களையும் கண்ணசைக்காமல்
பார்த்துக்கொண்டே வந்தாள். அவள்
மனதிற்குள் இளங்கோவும், அவள்
மகளும் மாறி மாறி வந்தனர்.
ஆலையை சிற்றுந்து
நெருங்கியது. இவள் நெஞ்சில்
முன்னெப்போதையும் விட
படபடப்பு.
எதிரே இளங்கோ இருந்துவிடக்
கூடாதென்று கடவுளை
வேண்டிக்கொண்டாள்.
சிற்றுந்து வந்தடைந்தது.
இறங்கி ஆலையை பார்த்தாள். அவன்
இல்லை. ஒரு நிம்மதிப் பெருமூச்சு
விட்டுக்கொண்டாள்.
வேகமாக ஆலையினுள்
நுழைந்தாள். அத்தையை
தேடினாள்.
இவள் பின்னால் நின்று
“ஏ மருமொவளே இன்னைக்கு என்ன
மொகத்துல பவுடர் ஏறியிருக்கு,
கண்ணு செவந்திருக்கு, சேலை
புதுசா இருக்கு. எதும்
விசேசமா…”
“அப்டீலாம் இல்லத்தே ஒங்ககிட்ட ஒரு
முக்கியமான விஷயம் பேசணும்”
“சொல்லு கோதை”
வந்த கடிதம், இவளின் குழப்பம்
அத்தனையும் சொன்னாள்.
அத்தை சற்றும் சிந்திக்கவே இல்லை.
“கடவுளா பாத்து ஒரு நல்லத
காட்டியிருக்கான் வுட்றாத
மக்களே… இறுவத்தஞ்சி வயசுல
எல்லாத்தையும் தொலச்சுட்டு
நிக்காளேனு ஒன்னய பத்தி
சங்கடப்படாத நாளே இல்ல மக்கா. அவன
பாத்தா கெட்டிக்காரனா
தெரியுவு. ஒங்க கல்யாணத்த நான்
நின்னு நடத்தி வைக்கேன்
கொழம்பாம சம்மதம் சொல்லு மக்கா…”
கோதை கண்கள் கண்ணீரால்
நிறைந்தது. அது ஆனந்தமா,
ஆற்றாமையா என்பதை தரம் பிரிக்கத்
தெரியவில்லை.
தன் முந்தானையால் கோதையின்
கண்களை துடைத்துவிட்ட வாறே
அவள் முகத்தை தன் தோளில்
சாய்த்து வைத்து அத்தை
தொடர்ந்தாள்
“எம்மொவன் பொண்டாட்டி சொல்ல
கேட்டு என்ன தனியா வுட்டுட்டு
போயிட்டான்.
‘ஒங்களுக்கு புள்ள மாதிரி
இருக்கேன், நீங்க திங்கிற சோத்துல
ஒரு பிடிய தாங்க’னு எங்கிட்ட
ஒருத்தன் கேட்டா நான் அவன
புள்ளயா ஏத்துக்க மாட்டேனா…?
அந்த மாதிரிதான் மக்கா. நானும்
உன் வயச கடந்து வந்தவதான் நாடி
நரம்ப அடக்கி எத்தன நாள் வாழுவ?
நாள ஒனக்கு எதுனா ஒன்னுனா உன்
பிள்ளைக்கு நல்லது கெட்டது யாரு
செய்யுவா? எதையும் யோசிக்காத
மக்கா. ஒனக்கு சொல்ல வெக்கமா
இருக்குனா சொல்லு நான்
அவங்கிட்ட போய் சொல்லுதேன்”
கோதை தலையை நிமிர்த்தினாள்.
அவள் மிகையாவே அழுதாள். ஏதோ
சம்மதம் சொல்வது போல்
தலையசைத்தாள்.
கோதையும் அத்தையும் ஏதேதோ
பேசிய வாறே பணியை
தொடர்ந்தனர். இளங்கோ வந்தான்.
ஆசிரியர் வகுப்பறை வந்ததும்
ஒழுங்காகும் மாணவர்களைப் போல
ஊழியர்கள் அனைவரும் வேலையை
துரிதப்படுத்தினர்.
இவன் கோதையையே பார்த்தான்.
வெகு நேரம் கோதை அவன் பக்கம்
திரும்பவில்லை.
நெடுநேரம் கழித்து அங்கிருந்த
படியே அவனை பார்த்தாள். ஒரு
பேருன்னதமான பார்வையது.
துளியும் மாசற்றிருந்தது அந்த
பார்வை. ஒற்றை பார்வையில்
விருப்பம் தெரிவிக்கும் கலை பிற
பெண்களைப் போன்றே
கோதைக்கும் வசப்பட்டது.
மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பவனைப்
போல் இளங்கோ சிரித்தான்.
காலை முதல் மாலை வரை
அவ்வப்போது இவை
நிகழ்ந்தேறியது.
மாலை ஐந்து மணி வாக்கில்
இளங்கோ ஆலைக்குள் வந்தான்.
“இங்க பாருங்கம்மா கொஞ்சம்
மண்ணு வந்திருக்கு. கொஞ்சம்
அவசரமா பேக் பண்ணணும். ஒரு
நாலு பேரு ரெண்டு மணி நேரம்
ஓவர் டைம் பாக்கணும்”
என்று கூறி அந்நால்வரில் கோதை
பெயரையும் இணைத்திருந்தான்.
“சார் இவுங்க மூணுபேருக்கும்
பக்கத்துல இருக்கிற ஊருதான்.
எனக்கு நாலு மைல் போவணும்.
பஸ்ஸு கெடயாது. வேற
யாரயாவது மாத்தி வுடுங்க”
என்றாள் கோதை.
“அட அத பத்தி நீ ஏன் கவலபடுற நான்
எங்க ஊருக்கு போற வழிதான்.
ஒன்னய எறக்கி விட்டுட்டு போறேன்”
கோதைக்கு புரிந்துவிட்டது. அவள்
மறுப்பேதும் சொல்லவில்லை.
எட்டு மணிக்கு பணி முடியும்.
மணி ஆறாயிற்று.
நேரம் நெருங்க நெருங்க இதயம்
இயல்பை இழந்தது. ‘என்ன
பேசுவாரோ! எப்படி
நடந்துகொள்வாரோ…!
கோதைக்கு வேலை
விளங்கவேயில்லை ஒருவித
நடுக்கத்துடனே இருந்தாள்.
கிட்டதட்ட ஒரு சிறுமியின் நடன
அரங்கேற்றத்திற்கு முன்பான
மனநிலை.
இரவு எட்டு மணியானது. பணி
நிறைவடைந்து ஆலையிலிருந்து
அனைவரும் வெளியேறினர்.
“கோதை நில்லு. நான் வண்டியில
கொண்டு விடுதேன்”
மறுப்பேதும் பேசாமல் நின்றாள்.
அனைவரும் வெளியேறிவிட்டனர்.
இளங்கோ மகிழுந்தை எடுத்து
வந்து
“ஏறு” என்றான்.
பின் கதவை திறக்க முயன்றவளை
“முன்னே ஏறு” என்றான்.
மகிழுந்து முன்னேறிப்
புறப்பட்டது.
ஆலையைக் கடந்தது.
கோதை அவன் பக்கம் திரும்பவே
இல்லை.
சாளரக் கண்ணாடி வழியே
வெளியே பார்த்துக்கொண்ட
ே இருந்தாள்.
குறுகிய அந்த தார்சாலையில்
குண்டிலும், குழியிலும் மேவி
ஏறி மகிழுந்து மெதுவாக
பயணித்தது.
இருவரிடமும் தியான மடம் போன்ற
ஓர் நிசப்தம். யார் பேசுவதென்று
தெரியவில்லை.
ஆசை, காதல், அச்சம், நடுக்கம் என
அனைத்து சூழ்ந்து பொதிந்து
வைத்திருந்தது கோதையை.
“க்..கோ…தை”
இளங்கோ மெல்லிய குரலில்
தயங்கியவாறு அழைத்தான்.
“ம்ம்…” இது கோதை
“நேத்து லட்டர் தந்தேனே ஒன்னுமே
சொல்லல?”
கோதையின் தலை கவிழ்ந்தது.
பதிலேதும் பேசவில்லை…
மீண்டும் சில நிமிட மௌனம்
இருவருக்குள்ளும்.
மீண்டும் அவனே ஆரம்பித்தான்.
“கோதை… ஒனக்கு இஷ்டம்தானே?”
முகத்தை முற்றிலுமாக
ஜன்னலோரம் திருப்பிக்கொண்ட
ு “ம்ம்ம்…” என்றாள்.
“தேங்ஸ்”
“ம்ம்”
குரல் வெடுவெடுக்க, தயங்கித்
தயங்கி கேட்டான்
“கோதை எனக்கு ஒரு முத்தம்
கிடைக்குமா”
அவளின் மௌனம் பதிலானது.
அதற்கு சம்மதமென்பது கூட ஒரு
பொருள் தானே?
மிக மெதுவாகச் சென்ற மகிழுந்து
சாலையின் கரையில் நின்றது.
“கோதை…”
“ம்ம்ம்…”
அவள் திரும்பவே இல்லை
அவன் அமர்ந்தபடியே நகர்ந்து
அவளருகே சென்றான்.
“கோதை…”
அவள் தலை திரும்பவே இல்லை.
அவன் வலது கையால் அவள்
முகத்தை திருப்பினான்.
முகம் முழுக்க இயல்பிழந்திருந்தது.
பழுக்க வைத்த மாம்பழத்தின் மேல்
படிந்திருக்கும் நீர்த்துளிகள் போல்
அவள் முகம் முழுக்க வியர்த்திருந்தத
ு.
‘ப்ச்’ என்று அவள் கன்னத்தில் ஒரு
முத்தத்தை பதித்தான்.
அவள் இரு கைகளாலும் தன்
முகத்தை மூடிக்கொண்டாள்.
கோதையால் அதை முற்றிலுமாக
மறுக்கவும் இயலவில்லை ஏற்கவும்
முடியவில்லை..
அவன் கை அவள் தோள் பட்டையில்
ஊர்ந்தது. நெளிந்தாள் அவள்.
கை மெல்ல நகர்ந்து கழுத்துக்கு
வந்தது.
அவள் உடலெங்கும் காய்ச்சல்
வந்தார்போல் வெப்பமேறியது.
அவன் கைகள் கழுத்தைத் தாண்டி
கீழே வர எத்தனித்தது.
இவள் கையால் அவன் கையை
பற்றிக்கொண்டு சொன்னாள்,
“இதெல்லாம் கல்யாணத்துக்கு
பொறவு…”
அவன் கையை விடுவித்தான்,
நெருக்கமாக இருந்த அவளை விட்டு
சற்று நகர்ந்துகொண்டான்.
“நாம… கல்யாணம் பண்ணிக்கணுமா?
இளங்கோ கேட்டான்.
“…ப்ப்புரியல…”
“இல்ல… நாம கல்யாணம்
பண்ணணுமா…?
கோதைக்கு இறுக்கமான உடல் சற்று
தளர்ந்தது, வெட்கச் சலனம் சற்று
மாறியது, சில நொடி அமைதி…
கோதைக்கு சட்டென தூக்கிவாறி
போட்டது.
திடீரென துணிவு வந்தவளாய்
கேட்டாள்,
“அப்ப விரும்புறேன்னு சொன்னது
ஒங்களுக்கு கூத்தியாளா
இருக்கவா…?
பாக்குற எடத்துல கள்ளத்தனமா
படுக்கவா..?”
இளங்கோ பதிலேதும் பேசவில்லை.
அவன் தலை தானாகத் தொங்கியது.
கதவைத் திறந்து சட்டென
வெளியேறினாள்.
************
ஊரின் அருகே வந்துவிட்டாள்.
வெட்டவெளியில் பெருங்கூட்டத்தில்
தன் ஆடை அவிழ்ந்ததைப் போல
அவமானமாய் இருந்தது
கோதைக்கு.
அவளையே அறியாமல் ‘கிர்ர்ர்…ரென
காரி சாலையில் உமிழ்ந்தாள். முகம்
முழுக்க கோபமும், கண்கள் நிறைந்த
கண்ணீருமாய் வீடு வந்து
சேர்ந்தாள்…
மறுநாள் ஆலையின் வாசலில்
அத்தை கோதைக்காக
காத்திருந்தாள்.
சிற்றுந்து அவளின்றி வந்தது.
கோதை வரவே இல்லை.
ஆலையின் உள்ளேச் சென்றாள்.
இளங்கோ மிடுக்கான உடையணிந்து
நின்றுகொண்டிருந்தான்…

 

 

(முற்றும்)
அன்புடன் # செ_இன்பா

images

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s