தாயுள்ளம்..!!!

23531938_s

அதி நுட்பமாய் குளிரூட்டப்பட்ட சொகுசு அறையில், பஞ்சு மெத்தை கட்டிலில் படுத்துக்கொண்டே நவீன ரக அகன்ற தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான் நிலவன்.

திடீரென அந்த செய்தி BREAKING NEWS என்ற தலைப்பில் தொலைகாட்சித் திரையில் மின்னியது. “இன்று இரவு 12 மணிக்குப் பின் ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள்கள் செல்லாது” என்றிருந்தது அந்த செய்தி.

நிலவனுக்கு உள்ளூர அதீத மகிழ்ச்சி, “என் தேசம் இனி முன்னேறிவிடும், “கறுப்புப் பணங்கள் இனி வெள்ளையாகும், அல்லது செல்லாக்காசாகும்” என மெய்சிலிர்த்தான், தனது மகிழ்ச்சியை வலைத்தளங்களில் பதிவு செய்தான், பிரதமரை புகழ்ந்து தள்ளினான்.

இந்த அறிவிப்பை எதிர்ப்பவர்கள் மீது வசை வார்த்தைகளை அள்ளித்தூவினான். தலை முடி முதல் அடி பாதம் வரை தேசபக்தியால் நிரம்பி வழிந்தான். திடீரென தன் கைபேசி அதிர்வோடு அலறியது. எடுத்து திரையை நோக்கினான். அவனது மனைவி யாழினி.

“மனுசனுக்கு புரட்சி’ங்குற பந்தம் கொளுந்துவிட்டு எரியுறத தண்ணீ ஊத்தி அணைக்குறதுக்காகவே பொண்டாட்டிங்குற ஒரு பந்தத்தை உருவாக்கியிருப்பானுக போல” என உள்ளூர அலுத்துக்கொண்டான்.

கைபேசி திரையில் பச்சை பொத்தானை தடவி “என்ன யாழு பேசி அரை மணி நேரம்தான் ஆகுது அதுக்குள்ள…” எதிர் முனையில் அழுகுரல் “ஏ யாழு என்னாச்சு? ஏன் அழற?”

“என்னங்க அத்த…”

“ஏ லூசு அம்மாக்கு என்னாச்சுடி? சொல்லித் தொல சோதன பண்ணாத…” என்று பதற ……

“என்னங்க அத்த நெஞ்சு வலியில துடிச்சுட்டாங்க. பக்கத்துல உங்க சித்தப்பாக்கு போன் பண்ணி கூப்பிட்டேன். வண்டி கூப்பிட போயிருக்காங்க… என்னங்க வண்டி வந்துருச்சு. நாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறோம், நீங்க உடனே கிளம்புங்க அப்பதான் காலையிலயாவது வர முடியும்…”

“சரி நான் ஒடனே கெளம்புறேன். நீ நம்ம ஊரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவாதே, 20 கிலோ மீட்டர்தான். திருநெல்வேலி பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ…”

“சரிங்க… கொஞ்சம் கழிச்சி போன் பண்ணுங்க நாங்க கெளம்புறோம்” படபடப்பாக சொல்லி அழைப்பை துண்டித்தாள் யாழினி.

நாலு சுவற்றுக்குள் என்ன செய்வதென அறியாமல் அலை மோதினான் நிலவன். சற்று நேரத்தில் முகமெல்லாம் வியர்த்தது… வெகு வேகமாக உடை மாற்றிக் கிளம்பினான்.

சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றினான் நிலவன். கைநிறைய ஊதியமும், அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனி ஒரு வீடும் கொடுத்திருந்தது அந்நிறுவனம். நான்காவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக கீழே ஓடி வந்து சாலையோரமாக நின்று அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை கை காட்டி மறைத்தான்.

“எங்க சார் போணும்?” “கோயம்பேடு பஸ்டாண்ட்டுக்குங்க” “300 ரூபா ஆகும் சார்” “பரவாலங்க சீக்கிரம் போங்க” ஆட்டோ செல்லத் துவங்கியது.

“சார் சில்லறை இருக்குதுல்ல?” “இருங்க பாக்குறேன். தன்னிடமுள்ள பணத்தாள்களை சோதனை செய்தான். சில ஆயிரம் ரூபாய்த் தாள்களும், சில ஐநூறு ரூபாய்த்தாள்களும், மூன்று நூறு ரூபாய்த் தாள்களும் இருந்தன. “இருக்குங்க வேகமா போங்க. எங்கனயாவது ATM இருந்தா செத்த நிப்பாட்டுங்க”

“சார் தெரியாதா? ATM பூராத்தையும் பூட்டிட்டு பூட்டானுங்க பிராடு பசங்க”

“சரிங்க வேகமா போங்க” வியர்க்க விறுவிறுக்க சொன்னான், உடல் முழுக்க மெல்லிய நடுக்கம். தன் தாயின் முகம் கண்முன் வந்து வந்து மறைந்ததது.

மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. “என்ன சொல்லு. ஆஸ்பத்திரிக்கு போயிட்டீங்களா?”

“ஆமாங்க டாக்டர் பாக்குறாங்க. என்னங்க சீக்கிரம் வந்திடுங்க எனக்கு பயமா இருக்கு…” மூக்கு சிந்த விசும்பினாள்.

“ஏ லூசு பயப்படாதேடி. நான் விடியகாலமே வந்துடுவேன். ஒன்னும் ஆகாது நீ எதுக்கும் கவலபடாத. சரி கையில காசு எவ்ளோ வச்சியிருக்க?”
“ஐயாயிரம் ரூவா இருக்குங்க, ATM card இருக்கு”

“ATM லாம் பூட்டிட்டானுவளாம், சரி ஒரு ராத்திரிதான சமாளிக்கலாம். பயப்படாத பஸ்டாண்டு வந்துருச்சு நா பொறவு பேசுதேன்” அழைப்பை துண்டித்து வேகமாக ஓடினான்.

ஏராளமான பேருந்துகள் நின்றன, ஜன நெருக்கடி வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. அனைத்து மக்களும் சிரிப்பை இழந்து ஒருவித நெருக்கடி நிலையிலேயே இருந்தனர். ஒரு பேருந்து தயாராக நின்றது.

பேருந்து படிக்கட்டில் நடத்துநர் நின்றுகொண்டிருந்தார். “சார் திருநெல்வேலிக்குதானே போவுது? “ஆமா சார் 900 ரூவா நூறு ரூவாயா இருந்தா வண்டியில ஏறுங்க” “ஏங்க 12 மணி வரை ஆயிரம், ஐநூறுலாம் செல்லும்தானே? மணி பத்துதானே ஆவுது…”

“சார் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார் எங்க மேலிடம் என்ன சொல்லுதோ அததானே நாங்க செய்ய முடியும்? இது பிரைவேட் வண்டி. கவருமெண்ட் வண்டியிலயே வாங்க மாட்டேங்றானுங்களாம்”

“என்னைக்குதான் இந்த நாடு திருந்த போவுதோ” என்று கூறி அடுத்த பேருந்துக்கு சென்றான். அங்கேயும் அதே பதில். ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கினான். அனைத்திலுமே ஒரே பதில். “நூறு ரூவா நோட்டு இருந்தா வண்டியில ஏறுங்க”

சுற்றிலும் பயணிகள், வாகணங்களின் பேரிறைச்சல், கரையோரம் கடைகள், ஜன்னலோர வியாபாரிகள் ஆயினும் நடுக்கடலில் துடுப்பிழந்த படகில் தனியாக சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தான் நிலவன்…

தன் கைபேசியில் இணையத்தை திறந்தான். தென்னக இரயில்கள் பட்டியலை நோக்கினான். நெல்லைக்கு செல்ல விவரம் கேட்டான். மாலை 5:30 க்கு திருக்குறள் 6:30 க்கு நிஜாமுதின் 7:30 அனந்தபுரி 9 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் என முடிந்துபோனது அந்த பட்டியல் மணி 10:10 ஆயிற்று. இனி இரயில் பயணமும் சாத்தியமில்லை. என்ன செய்வது? தனது கையறு நிலையறிந்து கலங்கினான்.

தன்  அன்னையின் மலர்ந்த முகம், உரக்கப் பேசும் குரல், தலையை கோதிய விரல்கள், தலை சாய்ந்த மடி என நெஞ்சில் நிறைந்த அனைத்தும் நினைவில் வந்து வந்து சென்றது. நடைமேடை இருக்கையிலொன்றில் அமர்ந்தான். என்ன செய்வது? யோசித்தான்.

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் தனது கைபேசியில் தனது தோழி விநோதா’வுக்கு அழைப்புவிடுத்தான். “சொல்டா நிலவா. என்ன இந்த நேரத்துல?”

“எங்க இருக்க இப்ப? ஒரு உதவி வேணும்.”

“குடும்பத்தோட திருப்பதி போனோம்டா. இப்ப வந்துட்டு இருக்கேன். என்ன விஷயம் சொல்லு…”

“இல்ல கார் வேணும். திடீர்னு அம்மாவுக்கு…” நடந்த அனைத்தையும் கூறினான். சிறிது பதட்டத்துடன் கூடிய கரிசனத்தோடு “டேய் கவலபடாதே. அநேகமா 12:30 க்குலாம் வந்துடுவேன்”

“ஓகே கோயம்பேடு பஸ்டாண்டுக்கு வா. நான் வெயிட் பண்றேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

“ஏலேய்… நெலவா… சீக்கிரம் வா மக்கா. அம்ம ஒனக்காக காத்துகெடக்கேன். சொந்த ஊருல பொழக்கிறவம்லாம் மனசன் இல்லயாலே?, இப்டி அசலூர்ல போயி கெடக்குறதுக்கா ஒன்னய அரும்பாடுபட்டு படிக்க வச்சேன்?” தன் அன்னை இறுதியாக பேசிய வார்த்தை இது.

திடீரென தன் கைபேசி அதிர்ந்தது. “என்ன யாழினி..?” தளர்ந்த குரலில் கேட்டான் நிலவன்.

“என்னங்க அத்தைக்கு மாரடைப்பாம். ICU ல வச்சிருக்காங்க. ஒடனே மருந்து மாத்திரைலாம் வாங்கணுமாம், 50 ஆயிரம் ரூவா ஆகுமாங்க…”

“சரி சரி பதட்டப்படாத. நீ போன டாக்டர்ட்ட கொடு நா பேசுதேன்”

“இருங்க ஒரு நிமிசம்” “ஹலோ சார் சொல்லுங்க” “சார் நான் நாளைக்கு காலையில வந்துருவேன், நான் இப்ப சென்னையில இருக்கேன் சார். நீங்க ட்ரீட்மென்ட்ட கன்டினிவ் பண்ணுங்க சார் நான் வந்து பணம் செட்டில் பண்றேன் “

“சார் ஐ கேன் அண்டர்ஸ்டன்ட். பட் என்னால ஒண்ணும் பண்ண முடியாது. கொஞ்சம் சிரமம் பாக்காம நண்பர்கள்ட்ட அரேஞ்ச் பண்ணுங்க”

“சார் உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க . நா மணி டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்”

“ஸ்யூர் சார். தேங்யூ.”

“சார் ஒண்ணு கேக்குறேன் தப்பா நெனக்காதீங்க. எங்கிட்ட நெட் பேங்கிங் வசதி இருக்கு, அதுல பணமும் இருக்கு. நா கொடுத்துட்டேன். இந்த வெவரம் தெரியாதவங்க, பணம் இல்லாதவங்க என்ன செய்வாங்க?” எதிர் னையில் பதிலேதுமில்லை. சில நொடிகள் கழித்து யாழினி பேசினாள்.

“ஏங்க டாக்டர்ட்ட என்ன பேசினீங்க?. அவரு மொகம் வாடி போறாரு..”

“பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். நீ பயப்படாதே அம்மைக்கு ஒண்ணும் ஆவாது. நம்ம பொண்ணு எங்க இருக்கா?”

“தொட்டில்ல தூங்கிட்டு இருந்தா, ஒங்க சித்திய பாத்துகிட சொல்லிட்டு வந்தேன்”

“சரி நீ கவனமா இரு. என் மொபைல் சார்ஜ் கொறைவாதான் இருக்கு. ஒருவேள சுவிட்ச் ஆஃப் ஆனாலும் பயப்படாத வந்துடுவேன். அழாத.”

“சரிங்க நீங்க கவனமா வாங்க. எனக்கு இங்க இருக்குற ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப கஷ்டமா இருக்கு. சீக்கிரம் வாங்க.”

“சரி அழாத. கவனமா இரு” எனக்கூறி அழைப்பை துண்டித்தான். தனது பணப்பையில் செல்லும் காசு ஏதேனும் உள்ளதா என பரிசோதித்தான். பத்து ரூபாய்களில் சில இருந்தது. அருகிலிருந்த தேனீர் கடைக்கு சென்று ஒரு தேனீர் அருந்தினான். மீண்டும் அதே நடைமேடை இருக்கையில் வந்து அமர்ந்தான்.

“ஏட்ட யாழினி… ஆம்பள சூரியன் சுள்ளுனு குண்டியில சுடுற வரை ஒறங்குவான். பொட்டச்சி சூரியன் உதிக்குறதுக்கு முன்ன முழிக்கணும். செனம் வெளிய வா” உரக்கக் கத்தினாள் நிலவனின் தாய். “அடக்கோழி மாதிரி ஒம்போது மணி வர… பொட்டச்சி இப்டி ஒறங்குனா குடும்பம் வெளங்கிதான் போவும்” வாயில் வைத்து முனங்கியவாறே சென்றாள்.

“என்னங்க ஒங்க அம்மய பாருங்க. புதுசா கல்யாணமான சின்னஞ் சிறிசுகங்குற இங்கிதம் கூட தெரியல”

“சரி சரி விடு பெருசுக அப்டிதான், நாமதான் சமாளிக்கணும்” “வுடுங்க என்னய. ஒங்க அம்மய நீங்க வுட்டு கொடுக்கவா செய்வீங்க” நிலவனின் இறுக்கமான அணைப்பிலிருந்து விடுபட்டு இரு உடலையும் மூடியிருந்த போர்வையை இழுத்து, எறிந்து, எழுந்து உடையணிந்தாள் யாழினி. என்றோ நடந்தது நினைவில் வந்தது நிலவனுக்கு.

“லேய் நெலவா நீ கோடி ரூவா சம்பாதிச்சாலும் சிக்கனமா இல்லேனா பத்து பைசா சில்லற கூட தங்காது. ஒம்பொண்டாட்டிக்கு வாரத்துக்கு மூனு சீல, சாப்பாட்டுக்கு திருநெல்வேலி பெரிய ஓட்டலுன்னு செலவு பண்ணா நீ மெட்ராசுல இல்ல அமெரிக்காவுக்கே போயி சம்பாரிச்சாலும் போதாது. புள்ள உண்டாயி மூணு மாசங்கூட ஆவல. புள்ளய பைக்குல ஏத்திகிட்டு ஊரு ஊரா அலையுதான் போக்கத்தப்பய” நிலவனின் தாய் சொல்ல சொல்ல யாழினி முகம் கோபத்தில் சிவந்தது. படபடவென வேகமாக சென்று கதவை படாரென அடைத்தபடி தன் அறையின் உள் சென்று படுத்துக்கொண்டாள்.

திடீரென கைபேசி ஒலித்தது. நினைவுக்கு வந்தான் நிலவன். “விநோதா எங்க இருக்க?”

“வெளியே வா. என்ட்ரன்ஸ்ல நிக்குறேன்” வேகமாக சென்றான்.

விநோதாவும் அவள் தந்தையும் இவன் வருகைக்காக காத்து நின்றனர். “டேய் டோன்ட் ஃபீல்டா. அம்மாவுக்கு எதுவும் ஆகாது மெதுவா கவனமா போ. நானும் வேணும்னா கூட வரவாடா?”

“இல்ல விநோதா நா பாத்துக்குறேன். அங்கிள் நா உங்கள வீட்ல டிராப் பண்ணிட்டு போகவா?”

“இல்லப்பா நாங்க போயிடுவோம். மணி இப்பவே ஒண்ணாயிடுச்சு நீ கவனமா போயிட்டு வா. பெட்ரோல் டேங் ஃபுல் பண்ணிட்டேன். சோ நத்திங்ட்டு வொர்ரி.”

“சரிங்க அங்கிள், தேங்ஸ் விநோதா. பை” “டேய் லூசு அம்மாவுக்கு எதுவும் ஆகாதுடா. இப்பதான் எல்லாமே ஓகேதானே. அப்புறமும் ஏன் உர்ருனு இருக்குற?” விநோதா கேட்டாள்.

“இல்ல எனக்கு உதவி செய்ய நீ இருக்குற. உதவி கிடைக்காத ஆயிரம் பேர் இன்னும் அந்த பிளாட்பாம்லயே இருக்காங்க. அதுல என்னய போல நெலமயில உள்ளவங்க எத்தன பேரோ…” பெருமூச்சு விட்டான் நிலவன்..

விநோதாவின் கண்கள் லேசாக கலங்கியது… “கண்களை துடைத்துக்கொண்டாள். “எத பத்தியும் நெனக்காம பத்திரமா போயிட்டு வா. டேக் கேர்டா நிலவா”

“பை” சொல்லி புறப்பட்டான். மகிழுந்து தாம்பரம் தாண்டி சென்றது. வேகம் நூறு கிலோ மீட்டரை தொட்டுச் சென்றது.

பழைய நினைவுகளுக்குள் மீண்டும் சென்றான்.

“எம்மோ ஒரு மனுசன் வேலைக்கு போயிட்டு வூட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கணும். ஒண்ணு நீ நொய்யி நொய்யிங்குற, இல்லேனா யாழினி நொய்யுங்குறா. ஒங்க ரெண்டு பேருகிட்ட மாட்டிகிட்டு நாந்தான் மத்தளம் மாதிரி அடிவாங்குறேன்”

“ஒனக்கு ஒம்போது வயசு இருக்கும். ஒங்க அப்பன் யாவாரத்துக்கு போன எடத்துல ஒருத்திகிட்ட பழகிட்டு அவா கூடயே போயிட்டான். போனா போறான் எனக்கு எம்புள்ள இருக்கான்னு, காடு காடா அலஞ்சி கருப்பட்டி வித்து, கஞ்சி குடிச்சும் குடியாமலும் ஒன்னய வளத்தேன். பவுசா படிக்க வச்சி பக்குவமா பொண்ணு கட்டி வச்சதுக்கு நீ நல்ல அழகான வார்த்தய கேட்டுபுட்ட மக்கா…” ராகம் இழுத்தாள் நிலவனின் தாய் கண்களில் கண்ணீர் பொங்க…”

சில நாட்கள் சென்றது மீண்டும் முனுமுனுத்தாள் நிலவனின் தாய். “ஏலேய் ஒழுங்கு மரிவாதையா ஒம்பொண்டாட்டிகிட்ட சொல்லிபுடு. இங்க இருந்தா காலையில முத்தத்துல சாணி தொளிக்குறதுல இருந்து வூட்டுல சோறு கறி பொங்குறது வர எல்லாத்தையும் அவாதான் செய்யணும். என்னால செய்ய முடியும் ஆனா நான் செய்ய மாட்டேன்.”

“எம்மோ அவா அவுக வூட்டுல வளந்த விதம் அப்புடி. எந்த வேலையும் செய்யாமலே வளந்துட்டா. நீதாம்மோ கொஞ்சம் அணுசரிச்சு போவணும்.”

“என்னங்க யாரும் எங்கிட்ட அனுசரிச்சு போவாண்டாம். என் தலையெழுத்து உங்க அம்மகிட்ட கெடந்து சாவணும்னு இருக்கு. விதிப்படி நடக்கட்டும் விடுங்க…” யாழினி கோபம் கொப்பளிக்க சொன்னாள்.

வேகமாக ஓடிச்சென்று யாழினியின் தலைமுடியை பிடித்து “ஏ செறிக்கியுள்ளா நானென்ன அரக்கியா? நா ஒன்னய இங்க கொல்லயா செய்யுதேன்?” வலி தாளாமல் ஓ…வென அழுதாள் யாழினி.

“எம்மோ என்ன காரியம் பண்ணுதா.. வாயும் வயிறுமா இருக்குற புள்ளய போயி… விடு கைய…” என பிடித்து இழுத்தான். நிலவனின் தாயார் தடுமாறி கீழே விழுந்தாள்…

“இனி இது வேலைக்கு ஆகாது. நா அவள அவிய அம்ம வூட்ல கொண்டு விட்டுட்டு மெட்ராஸுக்கு போறேன். இனி வரமாட்டேன்.”

“போ நா செத்தாலும் என் மூஞ்சியில முழிக்காத போயிடு…”

வானம் விடிந்தும் விடியாமல் காணப்பட்டது. மகிழுந்து திருச்சியைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. சாலையோரக் கடையொன்றின் முன் வாகனத்தை நிறுத்தி, ஒரு தேனீர் அருந்தினான். நேரம் காலை 6 மணியை கடந்திருந்தது. கைபேசியை பார்த்தான். அது உயிரற்று செயலிழந்து கிடந்தது. மீண்டும் மகிழுந்தை கிளப்பினான். பழைய நினைவுகள் மீண்டும் நிலவனை ஆட்கொண்டது.

சரியாக மூன்று நாட்கள்தான் ஆகிறது. யாழினியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. “என்ன சொல்லு மா. கொழந்த என்ன பண்றா? பால் ஒழுங்கா குடிக்குறாளா?”.

“அதெல்லாம் ஒழுங்காத்தாங்க குடிக்குறா. ஒரு முக்கியமான விசயம்”

“என்ன சொல்லு” “இன்னைக்கு ஒங்க அம்ம எங்க வீட்டுக்கு வந்தாவ”

தூக்கி வாறி போட்டது நிலவனுக்கு… “என்ன சொன்னா? ஏதாவது சண்டையா?” “ச்சே ச்சே இல்லீங்க. எங்க வூட்டுக்குள்ள வரும் போதே ஒரு மாதிரி கூசியேதான் வந்தாவ.. ‘எம்மறுமொவா இருக்காளா?’னு கேட்டாவ… நான் இதுக்கு முன்ன அவியல இப்டி பாத்ததே இல்லீங்க. என் மனசெல்லாம் உருகி போச்சு…”

“என்னடி சொல்லுத என் கண்ணுலாம் கலங்குதுடி, எதுக்கும் அஞ்சாத, எவனுக்கும் பணியாத எங்க அம்மயா ஒங்க வீடு தேடி வந்தா…?”

“ஆமாங்க. இருக்க வச்சி ஒரு தம்ளாருல மொர் கொடுத்தேன்.” ‘எம்மா நான் சின்ன வயசுலேருந்தே யாருக்கும் தலகுணியாம வாழ்ந்துட்டேம்மா. ஆனால் நா பெத்த மக்ககிட்ட என் வீம்பு, பிடிவாதம்லாம் செல்லாக்காசாயி போச்சும்மா, நான் உன்னய காத்தால எந்திரிக்க சொன்னது ஒங்க ஆசாபாசத்த கெடுக்க இல்லமா. பொம்பள விடியுமுன்ன எந்திரிக்கணும். அப்பதான் வூடு முழிப்பா இருக்கும், நான் உன்னய சீல எடுத்ததுக்கு சத்தம் போ்ட்டேன். ஏன்னா நம்ம குடும்பத்தோட வேர் நீ. ஒனக்கு சிக்கனம்னா என்னனு தெரியணும்னுதான். நீ திருநெல்வேலி ஓட்டல்ல போயி சாப்டத நான் குத்தம் சொல்லலமா வயித்துல ரெண்டு மாச புள்ளய வச்சிகிட்டு பைக்குல அலைஞ்சா கரு கலஞ்சு போவும், எனக்கு நெலவன் பொறக்குறதுக்கு முன்ன மூனு பிள்ள கருவுலயே கலஞ்சி போச்சு…”
‘காட்டு வேல செஞ்ச எனக்கு வூட்டு வேல பெரிய கஷ்டம் இல்லம்மா. ஆனா ஒனக்கு வயித்துல ஆறாவது மாசம். அந்த நேரத்துல நல்லா குனிஞ்சு நிமிந்து வேலை செய்யணும் மக்கா அப்பதான் சொகமா புள்ள பொறக்கும். அது மட்டும் இல்லாம நான் இருக்க வர இதெல்லாம் நா பாக்குறேன். எனக்கு முன்னாள மாதிரி ஒடலுக்கு வாக்கா இல்ல. எப்ப வேணாலும் போயிருவேன் போலதான் இருக்கேன். எனக்கு பொறவு நீதான மக்கா இந்த குடும்பத்த பாக்கணும்? ஆனா உன் கொண்ட முடிய பிடிச்சது எந்தப்புதான். ஆனா உன்னய எம்மவ மாதிரி நெனச்சிதாம்மா அவசரப்பட்டுட்டேன்.” ஒங்க அம்ம உன் முடிய பிடிச்சி இழுத்தா பொறுத்துக்குவல்லா மக்கா… னு அழ ஆரம்பிச்சுட்டாங்க… யாழினி விழிகள் நிறைந்து கண்ணீரினால்.

“அத்த அதெல்லாம் ஒண்ணும் இல்லத்த. நீங்க அழாதீங்க.. இருங்க ஒங்க பேத்திய எடுத்துட்டு வாரேன்னு பிள்ளய எடுத்து கையில கொடுத்தேங்க, பிள்ள கையில வச்சிகிட்டு ‘என்னய மாதிரியே இருக்கியே’னு ஆச தீர முத்தம் கொடுத்தாவ, தேம்பி தேம்பி அழுதாவ. அந்த ரெத்த பாசத்துக்கு சரிசமமா இந்த ஒலகத்துல எதுவுமே இல்லங்க” “நிலவனுக்கு வார்த்தை வரவில்லை.

தழுதழுத்த குரலில் சொன்னான். “சரி நீ நாளைக்கே பிள்ளைய தூக்கிட்டு நம்ம வூட்டுக்கு போயிடு…” “சரிங்க” என அழைப்பை துண்டித்தாள்… மகிழுந்து கோவில்பட்டியை தாண்டி சென்றுகொண்டிருந்தது…

“எங்க அம்மைக்கு எதுவும் ஆகாது.” என முழு நம்பிக்கை இருந்தாலும் செருப்பிலேறிய முள் போல் குத்திக்கொண்டே இருந்தது நிலவனுக்கு.

மகிழுந்து நெல்லை மாநகருக்குள் வந்தது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சுக்குள் படார் படாரென அடிப்பது போலிருந்தது. மருத்துவமனையை நெருங்கினான். தன் சொந்தத்தினர் சில மருத்துவமனை வராண்டாவில் நிற்பதை கண்டான். வேகமாக மகிழுந்தை விட்டு கீழிறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தான். அங்கே யாழினி அழுதுகொண்டிருந்தாள்… நிலவனை பார்த்தவுடன் .. அழுகைச் சத்தம் அதிகமானது… நிலவன் புரிந்துகொண்டான். கண்ணாடிக் குடுவைக்குள் மீனைப் போல கண்கள் கண்ணீரினால் சூழப்பட்டிருந்தது. கைகுட்டையினால் துடைத்துக்கொண்டான்.

இறுதி சடங்கு முடிந்தது. இரவாயிற்று. குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது, நிலவன் கட்டிலில் அமர்ந்திருந்தான், யாழினி நிலவன் மடியில் தலைசாய்த்து விசும்பிக் கொண்டிருந்தாள். “யாழு… யாழு குட்டி ஏன்டா அழுற. அம்மைக்கு நல்ல சாக்காலம்டி. எத்தன பேரு வருசக் கணக்குல இழுத்துகிட்டு கெடக்குதாவ. அம்மைக்கு எந்த கஷ்டமும் இல்லாம கடவுள் எடுத்துகிட்டாரு. அம்மயோட ஒரே ஆச நாம நல்லாயிருக்கணும்னுதான். நாம நல்லாதான இருக்கோம்?” யாழினி மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்து இறுக அணைத்தாள்.

அழுதுகொண்டே சொன்னாள். “காலையில அஞ்சி மணியில இருந்தே அத்தைக்கு இழுத்துகிட்டே இருந்துச்சு, நெலவன பாக்கணும், நெலவன பாக்கணும்னு சொல்லிகிட்டே இருந்தாவ. கடைசி வரைக்கும் பாக்காமலே போயிட்டாவளே…” என அழுதாள்.

மருத்துவமனையிலும், இறுதிச் சடங்கிலும் ஆம்பள அழக்கூடாது என கர்வத்தோடு இருந்த நிலவன் அந்த சிறு அறையில் பெரும் சத்தத்தோடு கதறி அழுதான்…

அன்புடன்

செ_இன்பா
 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s