விதை

vithaigal-nam-kaiyil-irukkattum

 

சுற்றிலும் புத்தகங்களால் சூழப்பட்ட ஒரு
அறையினுள் நாற்காலியில் அமர்ந்திருந்தான்,
புத்தகத்தை பிடித்திருந்த தன் இரு கைகளையும் மேசை
தாங்கிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு
ஆங்கிலப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான், அதே
மேசையின் மீதிருந்த தொலைப்பேசி
திடீரென சிணுங்கியது…
ச்சே எதையாவது ஆர்வமா படிக்குறப்பதான்
இந்த போன் எழவு வேற வந்து தொலயுது.
“வணக்கம் விவேகன் நீங்க யாருங்க?”
“டேய் நான் அக்கா பேசுறேன்டா”
“என்ன சொல்லு” சற்றே எரிச்சல்
காட்டினான்
“டேய் இப்ப ஏன்டா பொங்குற? ஒரு
சந்தோஷமான செய்தி
சொல்லலாம்னு போன் பண்ணா
ரொம்பதான் பிகு பண்ற”
“அம்மா தாயே
சொல்லித்தொல”
“டேய் விவேகா அத்தான் இப்பதான்டா போன்
பண்ணாரு. இந்த வருசத்துக்கான சிறந்த
சமூக ஆர்வலர் விருது உனக்கு அறிவிச்சிருக்கா
ங்களாம்டா” நாற்பத்தேழு வயதாகிவிட்ட
பின்பும் தன் தம்பியிடம் குழந்தை போன்று
கொஞ்சிப் பேசினாள்.
“அக்கா அதுவா அது நேத்தைக்கே
தெரியும்க்கா.”
“அடக்கிராதகா உன் மொத்த
ரியாக்சனே இவ்ளோதானா?, ஓகே டைம் கிடைக்கும்
போது வீட்டுப் பக்கம் வந்துட்டு போ மூதேவி”
எனக்கூறி தொலைப்பேசியை வைத்தாள்.
விவேகன் புத்தகத்தை மூடினான். தன் மூக்குக்
கண்ணாடியை கழட்டி மேசையின் மீது வைத்தான்.
விழிகளில் நிறைந்து நின்ற நீரை இரு விரல்களால்
அழுத்தி கன்னத்தில் வடிய விட்டு பின்பு துடைத்துக்
கொண்டான், ஆழி சூழ் உலகைப்போல
இருள் சூழ்ந்த எனது வாழ்வில் இந்த
விருதுகளா ஒளி கொடுத்துவிடப்
போகிறது? என சலித்துக்கொண்டான்.
நீரிருந்தும், சத்துமிக்க மண்ணிருந்தும்
பக்கவாட்டில் சிறு புல் கூட இல்லா தனி
மரமாய் இன்று நிற்க காரணம் யார்?
யார் செய்த தவறு? உதிரும் மயிருக்குக் கூட
எண்ணை தேய்த்து வாரி வகுடெடுக்கும்
இந்த மனிதப் பிறவிகள் தன் சக உயிருக்கு
மதிப்பளிப்பதில்லையே? எத்தனை உயிரை
கொன்றாவது தன் பசிக்கு புசிக்க
துடிக்கும் இந்த மனுசசாதியை சாடுவதா?
அல்லது இந்த சாதியை படைத்த சாமியை
சாடுவதா? மனதிற்குள் பல கேள்விக்கனைகளோடு
தன் கடந்த காலத்திற்கு தன் மூளையை
தவழவிட்டான்…
சரியாக 25 ஆண்டுகளுக்கு; முன்பு வளம்
நிறைந்த ஒரு ஊர், உழைத்து வாழும் மக்கள்,
அப்பகுதியை சுற்றியிருக்கும் பச்சை
வயல்வெளியை
இச்சைகொள்ளாதோர் இல்லை எனலாம்
அவ்வளவு எழில் நிறைந்த பகுதியது.
துள்ளித்திரிந்தாடும் வளரிளம் வயதில் படிப்பை
முடித்து பூரணப் பொறியாளனாக
அவ்வூரில் அமைந்திருக்கும்
தொழிற்சாலைக்கு பணிபுரிய
வந்திருந்தான் விவேகன்.
தொழிற்சாலையில் தங்கும் வசதி
கிடையாது என்பதைவிட, அது கூடாது என்பதே
உண்மை. ஊழியர் ஒருவரின் உதவியுடன் அந்த
ஊரின் மையப்பகுதியிலேயே ஒரு வீடு வாடகைக்கு
கிடைத்தது.
முதன்முதலாக தன் வீட்டைவிட்டு
வேறொரு இடம், அதுவும் தனது பழக்க
வழக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடான
இடம். தனக்கு சற்றும் ஒத்துவராத அதிகாலை
விழிப்பு, விடுதி உணவு என கண்ணைக் கட்டி
காட்டில் விட்டாற்போன்று ஒருவாரம்
தள்ளிவிட்டான். தன் வாழ்விடத்தை விட்டு
இடம்பெயர்ந்த அகதியைப்போல ஒரு உணர்வு.
ஏதோ பாலைவனத்தில் அகப்பட்டது போன்ற ஒரு
அச்சம்.
இது சரிபடாது அப்பாவுக்கு லெட்டர்
எழுதிட வேண்டியதுதான். என வேகவேகமாக
“அப்பா என்னால இங்க இருக்க முடியாது
நான் வீட்டுக்கே வந்துடறேன்” என்ற
பொருள்படும்படியான ஒரு கடிதத்தை
எழுதி தன் அறையைவிட்டு வெளியே வந்தான்.
இந்த ஊர்ல போஸ்ட் ஆஃபிஸ் எங்கனு
தெரியலயே என பேந்த பேந்த விழித்தவாரே
வாசலை விட்டு இறங்கினான். தன் எதிர்
வீட்டிற்கு இடது புற வீட்டு வாசலில் ஒரு கிழவி
அமர்ந்திருந்தாள். அருகினில்
சென்றான்.

“பாட்டி இந்த ஊர்ல போஸ்ட்
ஆஃபிஸ் எங்க இருக்கு?” கிழவி வெற்றிலையை
இடித்தவாறே அமைதியாக தெரியாது
என்ற பாவனையில் கையை அசைத்தாள்.

“ஒருவேளை
இங்கிலீஸ் தெரியாதா இருக்குமோ!,
பாட்டி இங்க தபால் நிலையம் எங்க இருக்கு?”
பாட்டியிடம் பதில் இல்லை. வெற்றிலை
இடிப்பதில் மும்முரம் காட்டினாள். பாட்டியின்
தோளை தட்டியவாறே “பாட்டி……” என்ற
மாத்திரத்தில் “ஏல போல தூர உலக்கயால
அடிச்சி கொன்னுபுடுவேன்” சற்றே
தடுமாறி பின்வாங்கியத் தருணம்
வீட்டினுள்ளிருந்து ஒரு சிரிப்புச் சத்தம்.
யார்ரா அது என எட்டிப் பார்த்தான்.
வெங்காய வண்ண தாவனி, சந்தன
வண்ண பாவாடையில் பச்சை இலைகளும், சிவப்பு
பூக்களுமான வடிவமைப்பு, காதில் தங்க
வளையம், வட்ட வடிவ முகம், ஆங்காங்கே
பருக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட முகம். அவள்
கருவிழி அவனை ஏறெடுத்துப் பார்த்தது.
வடிவான இந்த இதழிலிலிருந்து வார்த்தை
வெளியேறியது “எங்க பாட்டிக்கு காது
கேக்காது”
“உங்க ஊர்ல காது கேக்கலேனா
உலக்கையால அடிக்க வருவாங்களா?”
வெடித்து வந்த சிரிப்பை அடக்க தன் வாயை
மூடிக்கொண்டாள்.
“உங்களுக்கு போஸ்ட் ஆபீசுதான போணும்?
பசாருக்கு போங்க பக்கத்துலதான் இருக்கு.”
“சரிங்க” என்றவாறே நகர்ந்தான். மீண்டும்
அதே சிரிப்பு அவளிமிருந்து…
விவேகனின் கால்கள் முன்னால் நகரநகர
மனம் மட்டும் அவ்விடத்திலேயே ஐக்கியமானது.
குல தெய்வ கோவிலைத் தாண்டி
செல்லும்போது திரும்பிப் பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொள்வதைப் போன்று
அவள் வீட்டைத் தாண்டும் ஒவ்வொரு
முறையும் திரும்பி பார்த்தே சென்றான். சில
முறை அவள் தென்படுவாள், சிலமுறை அந்த
கிழவி தென்படுவாள், சிலமுறை அவள்
தாயார் தென்படுவாள், சிலமுறை அவள்
அண்ணன் தென்படுவான். சில முறை
இவ்விருவர் விழிகளும் நேருக்கு நேர்
சந்தித்துக்கொள்ளும். சந்திக்கும்
சொர்ப்ப நொடிகளில்
அர்ப்பமாக ஒரு புன்னகையை விவேகன்
உதிர்ப்பான். இலக்கியா முகத்தில் எந்த
வேறுபாடுமிராது. ஆனால் உள்ளூர
மிகையாகவே சிரித்துக்கொள்வாள்.
எப்போதையும் விட சீக்கிரமாகவே விழிக்கத்
துவங்கினான், எப்போதையும்விட நேரம் கழித்தே
உறங்கச் சென்றான், எந்நேரமும் வாசலே
கதியென்றானான்.

எப்போதாவது
அத்திப்பூத்தார்ப் போன்று இலக்கியா அவள்
வீட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்து
சட்டென மறைந்து செல்வாள். தமிழ்
சினிமாவின் ஒட்டுமொத்த டூயட்
பாடல்களின் காட்சியில் இலக்கியாவோடு
நடனமாடினான், கவிதை எழுதுகிறேன் என்று
எதைஎதையோ கிறுக்கி ஏறத்தாழ கிறுக்கனாகிவிட்
டான், உடன் பணிபுரியும் நண்பரிடம்
அன்றாடம் நடைபெறும் அத்தியாவசிய
பார்வைகளை பகிர்ந்து பெரும்பாவச்
செயலுக்கு ஆட்பட்டான், கத்தியோ, சவரப்
பிளேடோ ஏதுமின்றி அவளையே
சொல்லிச்சொல்லி நண்பனை
கழுத்தறுத்தான். எப்போது
உறங்குவானென்று அவனுக்கே
தெரியாது, ஆனால் உலகமே
அழிந்தாலும் அதிகாலை ஐந்து மனிக்கு
விழித்துவிடுவான் காரணம் அவள் கோலமிட
வருவதை கவனிக்க…
அவர் தந்தையிடமிருந்து “மகனே நீ கஷ்டப்படாதே
உடனடியாக கிளம்பி வந்துவிடு” என மடல்
வந்தது” பதில் கடிதம் எழுதினான். “அப்பா
இங்கு எனக்கு இப்போது எந்த குறையுமில்லை, பல
நண்பர்கள் பரிச்சயப்பட்டுவிட்டனர், உணவு
பழகிவிட்டது, என் மனம் கவர்ந்த பலர்
இங்குள்ளனர், என்னைப் பற்றி
கவலைகொள்ளாதீர்கள், நான் சில
நாட்கள் கழித்து வருகிறேன்”
ஒருநாள் உலக அனுமாஸ்ய சக்திகள்
அனைத்தையும் துணைக்கழைத்து ஒரு கடிதத்தை
எழுதினான்.

“நான் உன்னை
அளவுக்கதிகமாக விரும்புகிறேன். என்
மனைவியாக நீ வரவேண்டுமென
ஆவல்கொள்கிறேன்” இடையிடையே எவனோ
எழுதிய கவிதைகளை
இணைத்துக்கொண்டான். கடிதத்தை
எழுதிவிட்டு உறக்கம் வரவில்லை. மனி 2, 3, 4
இந்த கருமம் புடிச்ச நேரம் வேற நகரமாட்டேங்குதே
… குளித்தான், இருப்பதிலேயே நல்ல
உடையொன்றை
அணிந்துகொண்டான், பவுடரை
அள்ளிப் பூசிக்கொண்டான். நடிகர்
ராமராஜனைப்போன்று காட்சியளித்தான்.
மனி ஐந்தாயிற்று… இன்னும் அரைமனி
நேரம்தான். நெஞ்சு படபடத்தது.
கைகால்கள் மெல்லிய நடுக்கம்
கொடுத்தது. மணி 5:20 இன்னும் பத்தே
நிமிடம்தான். பூச்சி, பூனை, பச்சி, பறுந்து என
அனைத்து சீவராசிகளும் குளிருக்கு
முடங்கிகிடக்கும் அந்த நேரத்தில் அவனுக்கு
வியர்த்து விழியத் துவங்கியது… திருவரங்கம்
சொர்க்க வாசல் திறந்து
நாராயணர் காட்சியளிப்பது போன்று கையில்
விளக்குமாறும், ஒரு பானையில் நீரோடும்
வெளியில் வந்தாள். மேடையேறி மைக்கை பிடித்து
பேச திராணியின்றி தினரும் சிறுபிள்ளையைப் போன்று
செய்வதறியாது அவளையே பார்த்து
நின்றான். அவள் கையில் விளக்குமாறோடு
இவனை முறைத்துப் பார்த்தாள்.
அவ்வளவுதான் அச்சத்தின் உச்சிக்கு
சென்று திரும்பிக்கொண்டான்.
சில நொடிகள் அனைத்து கடவுளையும்
துணைக்கழைத்து அவளை நோக்கிச் சென்றான்.
அவள் இவன் வருகையில் சற்று நிலைகுலைந்துதான்
போனாள். பத்தடி தூரத்தில் நின்று கடிதத்தை எட்டி
வீசினான். காண்டாமிருகம் வாயில்
அகப்பட்டு தப்பிவிட்டதைப்போல் விருட்டென்று
வீட்டிற்குள் சென்றுவிட்டான்…
விட்டிற்குள் சென்று ஒரு குவளை நீர்
பருகினான். அசுர பலத்துடன் உள்ள எதிரி
நாட்டை போர் புரிந்து வெற்றுவிட்ட வீரனைப்
போல இறுமாந்தான். சில நிமிடங்கள் கழித்தது.
பதட்டத்துடனே வெளியில் வந்தான்.
அவள் ஏதொரு சலனமுமின்றி அதை
இடத்தில் கோலமிட்டுக்கொண்
டிருந்தாள். ஆனால் அவன் வீசியெறிந்த
இடத்தில் கடிதம் இல்லை. கோலத்தை முடித்து ஒரு
கனிவுப் பார்வையுடனேயே வீட்டிற்குள்
சென்றாள் இலக்கியா…
மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்குள்
அனுப்பிவிட்டு பதட்டத்துடன் காத்திருக்கும்
கணவனைப் போல எதிர்பாத்திருந்தான்
இலக்கியாவின் பதிலுக்காக. மறுநாள்
அதிகாலை அதே நேரம். வழக்கம் போலவே
வந்தாள், முற்றத்தை சுத்தம் செய்தாள்,
சாணம் தெளித்தாள், கோலமிட்டாள்.
விவேகன் பதட்டத்துடன் பரிதாபமாக
வெறித்துக்கொண்டிருந்தான்.
இறுதியில் சிறிய காகிதமொன்றை
அவனைப் போலவே வீசியெறிந்து
சென்றாள் விசீகரச் சிரிப்புடன்…
வேகமாக கடிதத்தை கைப்பற்றினான். வீட்டிற்குள்
சென்றான். கடிதத்தை பிரித்தான்.

ஒரே
வரி “சம்மதம்”
பாவப்பட்ட பாமரனுக்கு கோடி ரூபாய்
லாட்டரி விழுந்ததைப் போன்று மகிழ்ச்சியில் துள்ளிக்
குதித்தான். காதல் பார்வையோடும்,
புன்னைகையோடும், கடிதங்களோடும் பயணித்தது.
நாட்கள் சில சென்றது, அருகருகே வீடு,
பேசும் ஆவலில் இரவு ஊரடங்கிய பின்பு வீட்டின்
பின்புறத்தில் சந்தித்தனர். பல நாட்கள் சில
பல முத்தங்களோடு காதல் இனித்தது.
அப்படியொரு தருணத்தில் மாட்டுக்கு
தண்ணீர் வைக்கும் தொட்டி கவிழ்த்து
வைக்கப்பட்டிருந்ததின் மேல் இருவரும்
அமர்ந்திருந்தனர், விவேகனின் மார்மீது
இலக்கியாவின் முகம் பதிந்திருந்தது. பத்து
விரல்களும் பின்னிக்கொண்டிருந்தது.
ஏதோ இயற்கை உபாதைக்காக பின்புறம் வந்த
இலக்கியாவின் தாய் கண்டு அதிர்ந்து
நின்றாள். இலக்கியாவின் கன்னத்தில்
பளாரென்று இரண்டு அடி
கொடுத்தாள். “வீட்டுக்குள்ள போ கழுத”
இலக்கியா அழுதுகொண்டே
வீட்டிற்குள் சென்றாள்…
விவேகன் செய்வதறியாது திகைத்து
நின்றான்.
இலக்கியாவின் தாய் முகத்தில்
கொப்பளிக்கும் கோபம், கண்களில்
கண்ணீர் பெருகி நின்றது..
“எய்யா உன்னய நல்ல பையன்னு
நெனச்சிருந்தே இப்டி பண்ணிட்டேய்யா.
ஒங்க வூட்டுக்குள்ள எவனாவது இப்டி வந்தா
நீ சும்மா வுடுவியா? எனக்கு புருசன் இல்ல.
ரெண்டு பிள்ளையளையும் வச்சிகிட்டு இந்த
ஆடுமாட்டையும் வச்சி கஞ்சி குடிச்சிட்டுருக்கோம்.
ஊருகாரி எவளுக்காவது இது
தெரிஞ்சா நாங்க மூனுவேரும்
நாண்டுகிட்டுதாம்யா சாவணும். எய்யா
உன் கால்ல வேணும்னாலும் விழுறேன் நீ
நல்லாருப்பா நாளைக்கு ஒங்க ஊருக்கு
போயிருய்யா.”
விவேகனுக்கு எங்கிருந்து அத்தனை துணிவு வந்ததோ
தெரியவில்லை
“ஏங்க இப்டி பேசுறீங்க? உங்க மகளும் நானும்
மனசார விரும்புறோம், எனக்கு அம்மா இல்ல
அப்பா மட்டும்தான், அக்காவும், நானும்
தான் எங்க வீட்ல, சொந்தமா
எங்களுக்கு வீடு இருக்கு, நான் படிச்சிருக்கேன்.
உங்க மகளை கொடுங்க நான்
பாத்துக்குறேன்.”
“வேண்டாப்பு. எங்க சாதிசனத்துல அது
பழக்கமில்ல, உனக்கு இன்னைக்கு கெட்டி
கொடுத்தேம்னா நாளைக்கு எம்
பையனுக்கு எவளும் பொண்ணு
கொடுக்க மாட்டாளுவ. ஐயா உன்
கால்ல விழுறேன் நீ போயிரு…” என விவேகனின்
காலில் விழுந்தவளை சட்டென நகர்ந்து
அமர்ந்துவிட்டான் விவேகன்.
“நான் ஊருக்கு போயிடுறேம்மா.
தயவுசெய்து நீங்க கால்ல
விழாதீங்க…”
என அழுதான், நடைபிணமாக வீட்டிற்குள்
வந்தான்
தன் உறவுகள், செல்வம், படைபலம்,, உடல்
பலம், உடை, உடமை என அனைத்தையும் ஒருசேர
இழந்ததைப்போன்று அதிர்ந்து நின்றான்.
செய்வதறியாது பித்துபிடித்ததைப் போல
பரிதாபமாய் இருந்தான், மிகுந்த சிரமப்பட்டு
உயரமான மலைக்கு கயிறு பிடித்து ஏறி உச்சிக்கு
சென்று கை நழுவி அதளபாதாளத்தில்
விழுந்ததைப் போன்று துயரமாக இருந்தான்.
அதிகாலை மனி நான்கு இருக்கும் ஆழ்ந்த
நிசப்தத்தில் வீட்டுக் கதவு மெதுவாக
திறப்பது போன்ற ஒரு சப்தம். பதட்டம்
பற்றிக்கொண்டது யாராக
இருக்கும்? மெதுவாக சென்றான்.
அழுதழுது கண்கள் வீக்கத்தோடு இலக்கியா!
“இலக்கியா நீயா? வாய் பேச
வார்த்தையில்லை. சத்தமிட்டு வாய்விட்டு அழவும்
வாய்பில்லை. இருவரும் இறுக்கமாக
அணைத்துக்கொண்டனர்.
“விவேகா என்னய உங்கூட கூட்டிட்டு போயிரு”
அவள் தாய் தன்னிடம் கூறியதனைத்தையும்
கூறினான். அழுதான், ஏங்கி ஏங்கி
அழுதான்.
“எனக்கு யாரபத்தியும் கவல இல்ல. நீ
இல்லேனா நான் செத்துருவேன்,
உன்னால என்னய கூட்டிட்டு போவ முடியுமா
முடியாதா சொல்லு”
“சரி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.
கொஞ்ச நாள் பொறு. எங்க
அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சுறட்டும்
நானும் அதுக்குள்ள கொஞ்ச காசு
சம்பாதிச்சுடறேன். எங்க கம்பெனியில
இருந்து வெளிநாட்டுக்கு ஆள்
அனுப்புறாங்க, போறேன் போயிட்டு ரெண்டே
வருஷத்துல வந்துடறேன் என்ன
சொல்ற?”
“ம்ம்ம்… சரி நான் ஒவ்வொரு
நிமிசமும் ஒனக்காகதான் காத்துட்டுருப்பேன்.
பக்கத்து வூட்டு விலாசத்துக்கு கடுதாசி போடு,
நானும் ஒனக்கு கடிதாசி போடுறேன். சீக்கிரமா
வந்துரு விவேகா. நீ இல்லாம என்னால
வாழமுடியாது விவேகா…” என
ஓ…வென அழுதாள். கன்னத்தில்
முத்தமழை பொழிந்தாள்.
“சரி சொவர் ஏறி குதிச்சி வந்தேன்.
நான் வூட்டுக்கு போறேன். கண்டிப்பா கடுசாசி
போடு” என்று கூறி அழுதுகொண்டே
விடைபெற்றாள்.
அதிகாலையிலேயே உடமைகளை எடுத்து
கிளம்பிவிட்டான் விவேகன்..
கடிதப்போக்குவரத்துடன் காதல் உயிர்ப்பித்திருந்தது… இரண்டாண்டுகளை
நெறுங்கிக்கொண்டிருந்தது. தன்
அக்கா திருமணம் முடிந்தாயிற்று, தனக்கு
வாழத் தேவையான பணமும் சேர்ந்தாயிற்று..
எதிர்கால கனவுகளோடு வாழ்கை வெகு
மகிழ்ச்சியாக
சென்றுகொண்டிருந்தது. அப்போது
எதிர்பாராவிதமாக அந்த செய்தி
காட்டுத்தீ போன்று பரவியது.
குறிப்பிட்ட அந்த தொழிற்சாலையில்
ஏற்பட்ட விபத்தினால் விசவாயு தாக்கி ஒரு
கிராமத்தில் ஏராளமான உயிர்கள் பலி…
துடிதுடித்துப் போனான். பயம், அதிலும் ஒரு அசட்டு
நம்பிக்கை. என் இலக்கியாவுக்கு எதுவும்
ஆயிருக்காது. இருப்பு கொள்ளவில்லை.
உடனடியாக ஊருக்கு கிளம்பினான். விபத்து
ஏற்பட்டு இரண்டு நாட்களில் ஊர் வந்து
சேர்ந்தான். அந்த கிராமத்தை அடைந்தான்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த
கிராமத்தில் ஆளரவமற்று காணப்பட்டது.
ஆங்காங்கே ஆடுமாடுகள் மடிந்துகிடந்தன,
பெரும்பாலான வீடுகள் திறந்தே
கிடந்தன, ஆயினும் உள்ளே ஆட்கள் யாரும்
இல்லை..
பயம் தொற்றிக்கொண்டது.
நம்பிக்கை மெல்ல இழக்கத்துவங்கியது.
கண்ணீர் வழிந்தோடி கன்னம் கறைப்பட்டது.
வேகமாக தொழிற்சாலையை நோக்கி
நடந்தான். தொழிற்சாலை
பூட்டப்பட்டிருந்தது. தலையில் கவசத்தோடு
இராணுவ உடையணிந்த சிலர் அதன்
வாயிலில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களிடம் கேட்டான்.”சார் இந்த ஊர்ல
உள்ள மக்கள் எல்லோரும் எங்க?
எல்லோரும் வெவ்வேறு ஊருக்கு போயிட்டாங்க,
நிறையபேர் இறந்துட்டாங்க, சில பேர் உயிரோட
பெரிய ஆஸ்பத்திரியில இருக்காங்க.”
என் இலக்கியா செத்துருக்கமாட்டா,
கண்டிப்பா உயிரோட இருப்பா. ஆஸ்பத்திரியில
போய் பாக்கலாம் என முடிவெடுத்து
விரைந்தான்…
அரசு மருத்துவமனை நிரம்ப நோயாளியாய்
இருந்தனர். ஒவ்வொரு வார்டாக
சென்று பார்த்தான், கண்களில்
கண்ணீர், உடல்முழுக்க வியர்வை, பசி மயக்கம்,
சோர்ந்து போனான். இறுதியாக ஒரு வார்டு.
அகன்று விரிந்த ஒரு அறை. பல்வேறு பல
நோயாளிகள். துர்நாற்றம் முக்கைத் துளைத்தது.
வாந்தி வருவது போலிருந்தது. சுற்றி
பார்த்தான். வலது புறம் ஓரத்தில் அவன்
முதன்முதலாக பார்த்த வெங்காய
வண்ண தாவனி கண்ணில்பட்டது…
விரைந்தான். ஆம் இலக்கியாவேதான். சில
நாட்களாக அடர்பாலைவனத்தில் அகப்பட்டு
பசி தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு
குவளை அமிர்தம் கிடைத்ததைப் போலிருந்தது
விவேகனுக்கு. பெருமூச்சிரைத்தவாறே கட்டிலில்
கிடந்தாள். அருகினில் சென்றான்.
இலக்கியா…..வென ஓவென
கதரினான். அவளால் வாய் பேச
முடியவில்லை. கண்களில் நீர் வழிந்தது. தன்
கண்களால் முகத்தினருகே அழைத்தாள்.
தன் முகத்தை கொண்டு
சென்றான்..
மெதுவான கரகரப்பான குரலில்
“ஒன்ன பாக்கதான் என் உசுர பிடிச்சி
வச்சிருக்கேன். எங்க வீட்ல யாரயும் நான்
பாக்கல.. எல்லாரும் செத்துபோயிருப்பாவனு நெனக்கேன். என அவன்
நெற்றியில் முத்தமிட்டாள் தன்
வரண்டுபோன இதழால்…
“செல்லம் உனக்கு எதுவும் ஆகாதுடி. நீ
கவல படாத. நம்ம கல்யாணம்
பண்ணிக்கலாம்டி..” இலக்கியாவுக்கு
உதட்டில் புன்னகை கண்களில் கண்ணீர் சரி
என்பது போல் தலையசைக்கும்போதே மூச்சி மேலும் கீழும்
இரைத்தது…”
விவேகனின் கையை இருக்கமாக
பிடித்துக்கொண்டாள். அவன் கையை
உறுவி டாக்டர் என்று வேகமாக கத்தினான்.
அவள் மேலும் அழுத்தமாக பிடித்து போகாதே
என்பது போல் தலையசைத்தாள்.
அழுது கொண்டே கத்தினான். உனக்கு
ஒன்னுமில்லடி செல்லம் என முகத்தை
தடவினான். மூச்சிமுட்டு அதிகமானது சற்று
நேரத்தில் ஒட்டுமொத்த மூச்சும்
நின்றுவிட்டது…
அவனுக்கு அழுவதைத் தவிர வேறு
வழியொன்றுமில்லை…
மேசையில் சாய்ந்தவாறே நிகழ்காலத்துக்கு
திரும்பினான்…
பேருன்னதமான காதல் யாருக்காக,
எதற்காக சிதைந்தது? இனி என்றுமே
கிடைக்கப்பெறாத அந்த அன்பு
அயோக்கியர்களின் பணத்தாசையால் மாண்டு
போனதே! மக்களை வாழவைப்பதுதானே வளர்ச்சி?
அழிப்பதற்கு பெயர்
தொழிற்ச்சாலையா? இழப்பீடு
எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் ofஎன் இலக்கியாவின் அன்புக்கு
ஈடாகுமா? என் போன்ற எத்தனை விவேகனோ!
எத்தனை இலக்கியாவோ இந்த விஷவாயு
உறுஞ்சிக் குடித்தது… விவேகனுக்குள் பல
கேள்விகளை விதைத்தது இலக்கியாவின் மரணம்.
ஆம்! இலக்கியா உயிரை விடவில்லை இவனுக்குள்
விதை தான் விதைத்துச் சென்றுள்ளாள்
அவள் விதைத்த விதைதான் இன்று மரமாகி பல
மக்களுக்கு நிழல் தருகிறான்…. நிறைய
எழுதுகிறான், பேசுகிறான், உலகம் முழுக்க
பயணம் செய்கிறான். அவ்வப்போது சிறை
செல்கிறான், மக்கள் மனதிற்குள்ளும்
செல்கிறான். ஆம் விவேகன் சிறந்த
சமூகப் போராளியாகிவிட்டான் தனிமரமாக.
(முற்றும்)

நன்றியுடன்

செ இன்பமுத்துராஜ்

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s