சாராயமும்_சாதியும்

news-women-harassment-against-female-employees-stations-will-1-65897-65897-woman-beating

செவ்வானம் தரையில் படுத்துறங்குவது

போன்ற செம்மண் சூழ்ந்த முந்திரிக்காடு,
ஒவ்வொரு முந்திரித் தோப்புகளுக்கு
காவலாக கள்ளிச்செடிகளாலான
வேலிகள். இத்தோப்புகளினூடே அரசின் அதீத
கரிசனத்தில் ஒரு மகிழுந்து மட்டுமே
செல்லுமளவிலான தார்சாலை. கரையில்

“தேரிவிளை 1 கிமீ” என எழுதப்பட்ட ஒரு மைல் கல்.
அதன் மேலமர்ந்து யாரையோ எதிர்பார்த்து
காத்திருந்தான் மதியழகன்.
இது மூன்றாண்டுகால முயற்சியின் இறுதி
கட்டமென
எண்ணிக்கொண்டான்.. கையிலிருக்கும்
கடிகாரத்தை பார்த்தான் நேரம் மாலை 5
மணியாயிற்று. மனதிற்குள் ஆழிப்பேரலை
சுழன்றடிக்கத் துவங்கியது.

“ச்சே அது என்ன
எழவோ தெரியல. மத்த நேரம்லாம் நல்ல
தைரியமாத்தான் இருக்கேன்.அவ வர்ர நேரம்
மட்டும் எதுக்கு இப்படி பதட்டமா இருக்குனு
தெரியலயே… சரி என்ன நடந்தாலும் சரி
இன்னைக்கு விட்டுறகூடாதுலேய் மதி… என்று
உள்ளூற துணிச்சலூட்டிக்கொண்டான்.
வாடைக்காற்று சற்று வேகமாகவே வீசியது.
வீசிய முரட்டுக்காற்றில் முந்திரி மர இலைதழைகள்
வேலி தாண்டி பறந்த வண்ணமாயிருந்தன.
காற்றுக்கேற்றார் போன்று பனையோலைகள்
அசைந்தாடும் சத்தம் எங்கிருந்தோ கேட்டது.
புழுதிக்காற்று வீசியது. வீசிய காற்றில் கைவீசி
வெகு தூரத்திலிருந்து மூன்று பெண்கள்
நடந்துவந்தவண்ணமாயிருந்தனர்.
மதியழகன் தனது பார்வையை சற்று
விசாலமாக்கினான், வருவது
யாரென பார்வையை கூர்மைபடுத்தினான்.
வந்துவிட்டாளென இதயப் படபடப்பு
கூறியது. மனதிற்குள்ளே அவளிடம் பேசப்போகும்
வசனங்களை கூறி ஒத்திகை
பார்த்துக்கொண்டான். அருகில்
வந்துவிட்டாள். இதய ஓசை சற்று வேகமாகியது.
அலைவீசும் காற்றிலும் முகத்தில் அணலாடி
வியர்வை சிந்தத் துவங்கியது. தன்னருகில்
வந்துவிட்டாள்.

“மதி துணிந்து செயல்படு
உன்னை கடக்கிறாள்” என மனது உசுப்பிவிட்டது.

“ஏ குழலி நான் கொஞ்சம் தனியா
பேசணும்”
எப்படியோபேசிவிட்டான்.
அவள் தோழியிடமிருந்து பதில் வந்தது

“இவ்ளோ நேரம் தனியாதான இருந்திய
பேசவேண்டியதுதானே?”
குபுக்கென்று சிரிப்பு முட்டியது பூங்குழலிக்கும்
சக தோழியருக்கும். தனது துப்பட்டாவால்
வாயை மூடிக்கொண்டாள்.
பேச திணறிய வாயுடனே அடுத்த வார்த்தை
கூறினான்.

“நான் குழலிகிட்ட கொஞ்சம்
தனியா பேசணும்

“என்ன பேச போறிய? நீங்க எவ்ளோதான் கோழியா
கூவினாலும் எங்க அப்பா உங்களுக்கு
கட்டிதர மாட்டாவ. அது ஏன்னு உங்களுக்கே
தெரியும்.”

குழலியிடம் இந்த பதில் எதிர்பார்த்ததுதான்.

“தெரியுது நல்லாவே தெரியுது. எங்க
அப்பன் வேற சாதியில பொண்ணு
கட்டுனாருனு உங்க அப்பா எனக்கு கட்டித்தர
மாட்டாவங்குற அப்படிதானே?
எங்க அம்ம வேற சாதியா இருக்கலாம்
ஆனா அவ சாமிக்கு சமம். எங்க அப்பன்
மனசுக்கு பிடிச்ச வாழ்கையை யாருக்கும்
பயப்படாம வாழ்ந்த துணிச்சல்காரன்.

உங்க அப்பனை மாதிரி குடிகாரனில்ல,
கூத்தியா வைக்கல, புளியமரம் நெழலுல
இருந்து சீட்டு வெளயாடி
சொத்துபத்தெல்லாம் இழக்கல.
நான் கவுரவமா காரு ஓட்டி
பொழப்பு நடத்துதேன். மூனு லட்ச ரூவா
பேங்குல போட்டு வச்சிருக்கேன். துணிஞ்சி வா
உன்ன ராணி மாதிரி ஒக்கார வச்சி நான்
கஞ்சி ஊத்துறேன்.”

இத்தனை நாட்களில் இவன் இத்தனை
காட்டமாக., இத்தனை தீர்க்கமாக,
பேசியதில்லை. குழலி பதிலேதும் கூறவில்லை. அவன்
முகம் பார்க்காமல் திரும்பி நின்று
கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏட்டி வா போயிரலாம்” என தோழியர்கள்
இழுத்துக்கொண்டிருந்தனர். தூரத்தில்
பதநீர் கலசங்களோடு யாரோ மிதிவண்டியில்
வந்துகொண்டிருந்தார்.
குழலி நடந்தவாறே கூறினாள்.

“யாருக்கு
எங்கன்னு இருக்கோ அங்கதான் நடக்கும்.
பேசாம பொழப்ப பாருங்க”
குழலி நடந்துகொண்டேயிருந்தாள். மதி
அதே இடத்தில் நின்றுவிட்டான்.
உரத்த குரலில் கத்தினான்.

“ஏ..ட்டி குழலி சாதி மாத்தி
பொறந்ததுல எந்தப்பு என்ன
இருக்குனு சொல்லிட்டுப்போ.”
குழலி நிற்கவேயில்லை. எப்போதும் இவன்
பின்னால் அலைவதை கண்டு
எள்ளிநகையாடுவாள் இன்று இறுக்கமான
முகத்தோடிருந்தாள். கண்களில் லேசாக
கண்ணீர் கசியத் துவங்கியது. கைகளால்
துடைத்துக் கொண்டாள்.
சொல்ல முடியாது இந்த கண்ணீருக்கு
காரணம் காதலாக கூட இருக்கலாம்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் இலக்கற்று
நடப்பதைப் போன்று நடைபிணமாய் திரும்பி
நடந்தான் மதியழகன்.
இருபக்கமுமிருந்து தோழியர்கள் பேசிய வார்த்தைகள்
ஏதும் செவியை கடந்து மனதிற்குள்
இறங்கவில்லை பூங்குழலிக்கு. அவன் கூறிய

“சாதி மாத்தி பொறந்ததில எந்தப்பு
என்ன இருக்கு?” என்ற ஒரு சொல்
மட்டுமே மனதில் ரீங்காரமிட்டது.
அவன் ஞாபகத்திலேயே தேரிவிளை வந்தடைந்தாள்.
காங்கிரீட்

வசதியில்லா காலத்து பனை
மரத்தினால் வெய்யப்பட்ட உத்திரம்
வைத்த மாடிவீடு. இவ்வில்லத்தின் பின்புறம்
மாட்டு தொழுவம். இவ்விரண்டிற்கும்
அரணாக பனை மட்டைகளால் குறுக்கும்
நெடுக்குமாய் ஆணியறையப்பட்டு
வேலியமைக்கப்பட்டிருந்தது. வாயில் கதவு கூட
பனை மட்டைகள்தான்.

குழலி தன் வீட்டுமுன் வந்தாள். தன் தாய்
இசக்கி வீட்டு வாசலில் ஒரு கருங்கல்லின்
மேலமர்ந்திருத்தாள்.

“ஏ…ட்டி இன்னைக்கு ஏன் இவ்ளோ நேரம்” குழலியின்
தாயார் இசக்கியம்மாள் கேட்டாள்.

“எப்பயும் போலதான வாரேன். இதோட நேரத்துல
வரணும்னா எலிகாப்டர்லதான் வரணும்”

“இப்ப ஏன் நான் என்ன கேட்டேன்னு இப்டி
தெறிக்கா? போ போயி சாப்பிடு. போ.”
படலையை (கதவை) திறந்து வீட்டிற்குள்
சென்றாள் குழலி.
இசக்கியம்மாள் ராகம் இழுத்தாள்.

“என்ன ஆக்கத்துல பொறந்தேனோ
தெரியல. பெத்த பிள்ளையும் நம்மள
மதிக்க மாட்டேங்குது. கட்டுன புருசனும் மதிக்க
மாட்டேங்குறான். எங்க அப்பாதான் இந்த
ஊருலேயே பெரிய மிராசு. அப்பவே மச்சி வூடு
கட்டியவரு. தோட்டம்தொரவுலாம்
ஏகப்பட்டது இருந்துச்சி. இந்த
ஆக்கங்கெட்ட குடிகாரனுக்கு
கெட்டிகுடுத்து இன்னைக்கு,இந்த வூடும்
வெளங்காடுந்தான் மிச்சம். மாடு
நான் அரும்பாடுபட்டு வாங்கியது.
குலசைக்கு வேசம் கட்டியாச்சி, உவரிக்கு மண்ணு
சொமந்து பாத்தாச்சு, ஐயா
நாராயணசாமிய ஞாயித்து
கெழமையெல்லாம் கும்பிட்டு
பாத்தாச்சு, சொடலமாடனுக்கு
கெடா நேந்துவுட்டு பாத்தாச்சி. இதுல
வேற வேதகாரனுவ யேசுவ கும்பிடுங்கனு நோட்டீசு
தரானுவ.
எத்தன சாமிய கும்பிட்டும் இந்த நாறப்பய
திருந்தமாட்டேங்குறானே!,,,”
குழலி நைட்டியை மாத்திக்கொண்டு கையில்
சாப்பாடு தட்டோடு விரைந்து வந்தாள்.

“எம்மோவ் இப்ப ஏன் தெருவுல கெடந்து
கத்துறா? அப்பா ஒழுங்கு
தெரியாதா இந்த தெருவுக்கு? நீ
பொலம்புறத கேட்டு சந்தோசபடதான்
ஆளு இருக்கு. ஆறுதலுக்கு யாருமே இல்ல
பேசாம வூட்டுக்குள்ள வா.”

“இந்த மாட்டுல கறக்குற பால வச்சி
இருவத்தி ஐயாயிரம் ரூவா சீட்டு போட்டேன். கடேசி
சீட்டு முடிஞ்சி நேத்துதான் ரூவாய வாங்கி
மொளவு பெட்டிக்குள்ள போட்டு
வச்சிருந்தேன். இப்ப அதுல பத்தாயிரம் ரூவா
கொறையுது. நான் யாருகிட்ட
சொல்லி அழ? இருவத்தோரு மாசமா
கட்டி எடுத்த பணம். இந்த இடிவுழுவான்
வாயில மண்ணு வுழுந்துட்டே நான் என்ன
செய்ய?
கருத்து தடித்திருந்த இசக்கியம்மாள் முகத்தில்
கண்ணீர் வழிந்தோடியது.

“ஆ..மா இவர சொல்லி என்ன
கொற? குடிக்க தண்ணியெடுக்க
ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாத்தியாரு தோட்டம்
வரைக்கும் போகவேண்டியிருக்கு. ஆனா குடிக்க
பிராந்தி அந்த சைக்கிள் கடையிலேயே பிளாக்குல
கெடைக்குது.”
இசக்கியம்மாள் ஒன்னுமே பேசவில்லை. கண்ணீர்
மட்டுமே கன்னத்தை ஈரமாக்கிகொண்டிருந்தது.கருத்த மேனி, மேல் சட்டையின்றி ஒரு துண்டு மட்டுமே
தோளிலிருந்தது. ஒரு வெள்ளை வேட்டியை
ஏறத்தாழ காவி நிறத்தில் உடுத்தியிருந்தார்
சுடலைக்கண்ணு. மிதமிஞ்சிய போதையில் தன் வீட்டின்
முன் வந்தார். அவர் வந்ததும்
இசக்கியம்மாள் வீட்டினுள் சென்று கதவை
பூட்டிக்கொண்டாள்.
படலையை திறந்து வீட்டிற்குள் சென்று
திண்ணையில் படுத்துக்கொண்டான்.

“சிரிக்கி, கட்டுன புருசன வெளிய போட்டு கதவ
பூட்டுறியா. இருடி…” என்றவாறே
கண்ணயர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து கதவை திறந்து இசக்கி
வெளியே வந்தாள். சுடலை குறட்டையிடத்
துவங்கியிருந்தான்.

“வெளங்காதபய சாப்டானோ
சாப்டலயோ தெரியலயே” என்றவாறு
இசக்கி ஒரு போர்வையை போர்த்திவிட்டாள்.”
“ரொம்ப முக்கியம்மோ. உனக்கு
கொஞ்சம் நல்ல புருசன்
கெடச்சிருந்தாலும் சரிதான்” என குழலி
எள்ளிநகையாடினாள்.
இது இன்று மட்டுமே நடைபெறும் சம்பவமல்ல,
இது இக்குடும்பத்தின்
அன்றாடங்களிலொன்று.
சில நாட்கள் சென்றது. தினம் தினம்
தையல் பள்ளி செல்லும் வழியில் மதியழகனை
குழலியின் கண்கள் தேட ஆரம்பித்தது. அவன்
வரவேயில்லை. அவன் மகிழுந்துகள் நிறுத்துமிடத்தி
ற்கு வேண்டுமென்றே சென்றாள்.
அவனை காணவில்லை. அருகினில் ஒரு கடையில்
தன் தோழியோரோடு நன்னாரி சர்பத் தரக்கூறி
காத்து நின்றிருந்தாள்.
திடீரென மதி’யென்ற பெயர்
பொறித்த வெள்ளைநிற
மகிழுந்தொன்று வந்து நின்றது. தனது
கருவிழிகளால் ஓரப்பார்வையை
செலுத்தினாள். அவனேதான்.
மதியழகன். என்ன காரணமோ
தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறாக
அழகனாயுள்ளான். மனதிற்குள் ஆதவன்
பிரகாசமாய் எழத்துவங்கினான் குழலிக்கு.
வாகன நிறுத்தத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு
வெளியே வந்தான். எதிர்த்த கடையில்
குழலி. யாரும் எதிர்பாரா சமயத்தில்
பெய்யும் கோடை மழைபோன்று நெஞ்சில்
அத்தனை இதம்.
குழலி சர்பத்தை கையில் வாங்கினாள்.
மதி அவளையே வெறித்துக்கொண்டிருந்தான்.
மெதுவாக கையிலிருக்கும் சர்பத்தை தன்
செவ்விதழுக்கு அர்பணித்தாள். பார்வை
மதியிருக்கும் திசை நோக்கி ஓரமாக பாய்த்தது.
இதழுக்கு விடைகொடுத்து சர்பத்தை
இறக்கினாள். உதடு லேசாக புன்னகைத்தது.
கண்கள் மதியழகனையே
பார்த்துக்கொண்டிருந்தது.
மதி மனதில் குற்றாலச் சாரல். இதுவரை
காணாத மகிழ்ச்சி, பல ஆண்டுகளாக
வறுமையில் தவிக்கும் திரைப்பட கலைஞனுக்கு
கதாநாயகன் வாய்ப்பு கிட்டியதைப்போல்
அத்தனை ஆர்ப்பரிப்பு மதியழகனுக்கு.
கண்களால் “செல்கிறேன்” என
நாசூக்காக கூறி விடைபெற்றாள்.
இவனும் கண்களாலேயே சரியென
கூறினான்.

மெத்த மகிழ்ச்சியில் குழலி வீடு
திரும்பினாள். போதையில் தனது தந்தை
சுடலைக்கண்ணு வீட்டிலிருந்து தன் தாயிடம்
கெட்ட வார்த்தைகளில் எதையெதையோ
பேசிக்கொண்டிருந்தான்.
குழலிக்கு இது பழக்கப்பட்ட ஒன்றுதான்.

“எம்மோவ் இன்னைக்கு என்ன கொழம்பு
வச்ச?”
இசக்கி பதிலேதும் பேசவில்லை.
சுடலைக்கண்ணு தனது தோளிலுள்ள துண்டை எடுத்து
வியர்த்து வழியும் தன் முகத்தை
துடைத்துக்கொண்டான்.
சுடலைக்கண்ணுவின் குருதி படிந்த கண்களால்
குழலியை ஏறெடுத்துப்பார்த்தான்.
குழலி அஞ்சுவதாகத் தெரியவில்லை.
மண்ணின் குணம் அப்படி..அவளென்ன
செய்வாள்?.
மெதுவாக ஆரம்பித்தான்
சுடலைக்கண்ணு.
“சைக்கிள் கடையில பிராந்தி வாங்க
நின்னுட்டுருந்தேன். சைக்கிளு சரிபண்ண
ராசமணியும் நின்னுட்டுருந்தான். அப்பதான்
தலையில இடிய போடுற மாதிரி ஒன்னு
சொன்னான். நீ
கொல்லாங்காட்டுக்குள்ள
(முந்திரிக்காடு) அந்த சாதிகெட்ட பயகூட
பேசிட்டுருந்தியாம்ல?”
குழலியிடம் பதிலேதுமில்லை.

“ஏ…ய் செரிக்கி மொவள பதில
சொல்லு”
“ஆமா பேசிட்டுதான இருந்தேன். பேசுறது
தப்பா?”
“பேசுறது தப்பு இல்ல. சாதிகெட்ட பயகூட
பேசுறதுதான் தப்பு”
“சாராயம் குடிச்சி பொண்டாட்டி
புள்ளய தவிக்க வுடுறத விடவும் சாதி
கெட்டதா?”
இசக்கி குழலியை நிமிர்ந்து பார்த்தாள்.
சுடலைக்கண்ணு கொப்பளிக்கும்
கோபத்தில் பல்லை நெறுநெறுவென
கடித்தபடியே கூறினான்.
“குடிகாரன் குடிய விட்ட மறுநாளே சாதா
மனுசன். ஆனா சாதிகெட்டபய
சாவுற வரைக்கும் சாதி
கெட்டவன்தான்”
“எவன் என்ன சாதியா இருந்தா எனக்கு
என்ன. பொஞ்சாதிய கவுரவமா
வச்சி வாழ்ந்தா போதும். அவந்தான் ஒசந்த
சாதி”
தோளிலிருக்கும் துண்டை உதரியவாறே எழுந்துநின்று
சொன்னான் சுடலை. “அந்த
சாதிகெட்டபய கூட போனா உன்னையும்
கொல்லுவேன் உங்க அம்மையையும்
கொல்லுவேன். உனக்கு நான்
மாப்ள பாத்துட்டேன். எந்தங்கச்சி
மொவன்தான் உனக்கு மாப்ள.”
சட்டென துள்ளியெழுந்தாள் இசக்கி.
“ஏ….மனுசா! நீ ஆளுதானா? நானும் ஏதோ
மவகிட்ட அக்கறையா பேசுதானு
பொறுமையா இருந்தா
உந்தொங்கச்சி மவனுக்கு
கட்டிகொடுக்க போறியா மனுசா?
அவன் உன்னவிட பெரிய குடிகாரபய.
குடிக்க காசு வாங்கிட்டு எம்மொவள
கூட்டிகொடுக்க போறியா
சண்டாளா…”
பளாரென ஓங்கியறைந்தான் இசக்கியை.
அறைந்துவிட்டு கதவை வேகமாக சாத்திவிட்டு
வெளியே சென்றுவிட்டான்
சுடலைக்கண்ணு.
மறுநாள் தையலகத்திற்கு சென்று
திரும்பிக்கொண்டிருந்தாள். அதே
தேரிவிளை மைல் கல்லில் மதியழகன் வாடி நிற்கும்
கொக்கைப்போல அமர்ந்திருந்தான். மதி
வருவானென அவளுக்கு தெரியும்.
குழலி அருகினில் வந்தாள். தனது தோழியரை
“நீங்க போங்க நான் வாரேன்” என
சொல்லியனுப்பிவிட்டாள்.
ஆனந்தம், உரிமை, காதல்,
பெண்மையருகினிலாதலால்
மெல்லிய காமம் என மொத்த
சொர்க்கமும் மதியின் முன்னே.
தலைகுனிந்தபடியே குழலி தன்னகன்ற கருவிழியை
மட்டும் மேல்நோக்கினாள்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம்
பேசணும்”
“இதுக்குதானே மூனு வருசமா
தவங்கெடக்கேன்”
“நேத்தைக்கு எங்க வூட்ல சண்ட. எங்க
அப்பாவுக்கு நம்ம அன்னைக்கு பேசினது
தெரிஞ்சுபோச்சி. என்னைய ஏசினாவ. நான்
உங்களதான் கல்யாணம் பண்ணுவேன்னு
சொல்லிட்டேன். அப்புறம்தான்
சொன்னாவ எங்க அத்த
மொவன எனக்கு மாப்ள
பாத்துருக்காவளாம். எங்க அம்மாக்கு
இதுல சம்பந்தம் இல்ல. இருந்தாலும் மனசு
எதுக்கோ சஞ்சலமாவே இருக்கு”
மதி தனக்கு அதீத கோவம் வந்ததுபோல் சற்றே
சீற்றத்துடன் “நீ இனி அந்த வூட்டுக்கு
போகவேண்டாம். வா நம்ம வீட்டுக்கு.”
பைத்தியம் மாதிரி பேசாத. எங்க அம்ம
எனக்குதான் சாதகமா இருக்காவ.
எல்லாம் ஒனக்கு தெரியணுமேனு
சொன்னேன். அவ்ளோதான்.”
“ம்ம்ம் எதுனாலும் நா பாத்துக்குறேன்.
தைரியமா இரு”
பல ஆண்டுகளாக கணவன் மனைவியாய்
வாழ்ந்தது போன்று உரிமையோடு
பேசிக்கொண்டிருந்தனர்.
“சரி நான் வாரேன். எங்க அம்ம தேடுவா”
என வேகவேகமாக நடந்தாள்.
வீட்டிற்குள் சென்றாள். வீட்டில்
யாருமில்லை. சுடிதாரை அவிழ்த்து நைட்டியை
அணிந்துகொண்டாள்.
சோத்துப்பாணையை பார்த்தாள். சோறு இருக்கிறது.
குழம்பு பானையை பார்த்தாள். பருப்பு குழம்பு.
“ச்சே பருப்புனாலே நமக்கு வெறுப்பாச்சே”
கூட்டுக்கு என்ன பார்க்கலாம் என்று கவிழ்த்து
வைத்திருந்த மண்பானையொன்றை
திறந்தாள். நாட்டுக்கோழி முட்டை சில இருந்தன.
இரண்டு முட்டையை எடுத்தாள். ஒரு
வெங்காயத்தை எடுத்தாள். கத்தியை
தேடினாள். அகப்படவில்லை. அருகினில்
அரிவாள்மனை இருந்தது.
அரிவாள்மனையை எடுத்து தரையில் வைத்து
வெங்காயத்தை வெட்டினாள்.
அரிவாள்மனை அதே இடத்திலிருந்தது.
முட்டையை வறுத்தெடுத்தாள். தட்டில்
பருப்புக்குழம்புச் சோறோடு வருத்த முட்டை கச்சிதமான
உணவு. சமையலறையினிலேயே ரசித்து
உண்டுகொண்டிருந்தாள்.
சடாரென கதவுதிறக்கும் சப்தம்
கேட்டது.சுடலைகண்ணு சற்று கோபத்தோடே வந்தார்.
பானையில் தண்ணீர் மொண்டு
மடக்மடக்கென குடித்தார்.
இது எதையும் கவனிக்காதது போல தன் வேலையில்
மும்மரமாக இருந்தாள் குழலி.
“ஏ… நாய. நான் நேத்தைக்குதான் நாயி
மாதிரி தட்டோளமிட்டுருக்கேன்.நீ இன்னைக்கும் அந்த
நாயிகிட்ட பேசியிருக்கா”
வாய் நிறைய சோறு “ம்ம் ஆவ்மா” சோத்தை
மெண்டு முழுங்கினாள். “ஆமா அதுக்கு
இப்ப என்ன? நான் அவனதான் கட்ட
போறேன்”
“அடச்சீ சில்லாட்டப்பயவுள்ளா. எந்தங்கச்சி
மொவனதான் நீ கட்டணும். இது
நடக்கும்”
“உங்க தங்கச்சி மொவனுக்கு
கல்யாணம் நடக்கணும்னு ஆசை இருந்தா
உங்க கூத்தியா மொவ எவளாவது
இருப்பா அவளுக்கு கட்டி வையுங்க. எங்க
அம்மய மாதிரி குடிகாரனுக்கு நான் கழுத்த
நீட்ட மாட்டேன்”
சுடலைக்கு கோபம் தலைக்கேறியது. மிதமிஞ்சிய போதை
வேறு. குழலியை நோக்கி ஓடிச் சென்று
மார்பிலேயே மிதித்தான். சரிந்து மல்லாந்து
விழுந்தாள் குழலி.
அவள் தலை மயிரை பிடித்து அவளை தூக்கினான்.
“செரிக்கியுள்ளா நானும் கிளிப்பிள்ளைக்கு
சொன்னது போல சொல்லிட்டு
இருக்கேன். நீ ஒருபடியாதான் துள்ளுற?”
என்றபடியே தலைமயிரை பிடித்து வேகமாக
இழுத்தான்.
வலிதாளாமல் தனது முழு ஆற்றலையும்
ஒன்றுபடுத்தி வேகமாக ஒரு தள்ளு
தள்ளினாள்.
போதையினால் ஆற்றலிழந்த சுடலை சிறிது தூரத்தில்
சென்று பொதக்கென்று
விழுந்தார்.
விழுந்தவர் விழுந்தவர்தான். எந்த அசைவும்
இல்லை. கோபத்தில் மேலும் கீழுமாக மூச்சிரைத்தது
குழலிக்கு. விழுந்த தன் தந்தையை பார்த்தாள்.
கவிழ்ந்து கிடந்தார். கூர்ந்து கவனித்தாள்.
இரத்தம் கசிந்து பள்ளம் நோக்கி வந்தது. கடவுளே
என்ன இது.என பதறிஓடி தன் தந்தையை
எழுப்பினாள். எந்த அசைவுமில்லை.
கவிழ்துகிடந்தவரை பெருஞ்சிரத்தையெ
டுத்து திருப்பினாள். அரிவாள்மனை கழுத்தில்
பதிந்திருந்தது. சிர் சிர்ரென குருதி
கசிந்துக்கொண்டிருந்தது.
கீர்ரென்ற சத்தத்துடன் குழலி மயங்கிச்
சரிந்தாள்
இப்போது சுடலை ஒரு பக்கம் இறந்துகிடக்கிறான்,
குழலி ஒரு பக்கம் மயங்கிகிடக்கிறாள். ஆழ்ந்த
நிசப்தம். நேரம் மாலை நிலவரப்படி 6:30.
தலையில் புல்லு கட்டுடன் வியர்க்க விறுவிறுக்க
இசக்கி வந்தாள். படலை திறந்திருந்தது. சிறிது
மூச்சிரைத்தவாறே
“ஏ…ய் குழலி… படலய தொறந்து
போடாதேனு எத்தன தடவதான்
சொல்லணும் ஒனக்கு…?”
உள்ளிருந்து எந்த சப்தமும் இல்லை.
“கூப்டா சத்தம் தருதானு பாரு திமிரு பிடிச்ச
பயவுள்ள..”
வாழ்கை எப்போது எந்த அதிர்ச்சியை தருமென
அவதாரங்களுக்கே தெரியாது பாவம்
இசக்கியம்மாளுக்கா தெரிந்துவிடும்.?
மாட்டுத் தொழுவத்தில் புல்லுக்கட்டை
இறக்கி வைத்தாள். தன் முந்தானையினால்
தன்முகத்தை துடைத்துக்கொண்டு பின்
வாசல் வழியியே வீட்டினுள் நுழைந்தாள்.
பேரதிர்ச்சி…! தன் கணவன் இரத்த
வெள்ளத்தில் கிடப்பதை பார்க்கிறாள்.
“ஏ… என்ன பெத்த அம்மா இது யாரு
செஞ்ச வேலை…” கதறுகிறாள். கணவனின்
திறந்திருக்கும் கண்கள் இவளையே பரிதாபமாய்
பார்ப்பது போலுள்ளது. இசக்கி கை கால்கள்
நடுங்குகிறது.
சற்று வலப்புறம் பார்க்கிறாள். குழலி
மல்லாந்து கிடக்கிறாள். அவளது மார்பு
மேலும் கீழும் ஏறியிறஙகுகிறது.
“கடவுளே எம்பிள்ளைக்கு உசுரு இருக்கு…”
அருகிலிருந்த குவளையில் நீரெடுத்து குழலி
முகத்தில் தெளித்தாள்.
சிறிய முனகல் சத்தத்தோடு குழலி கண்
விழித்தாள்…
“ஏ… பாவிமட்ட என்னாச்சு மக்கா…?
தலைவிறி கோலமாய் கண்களில் கண்ணீரும்,
மூக்கிலிருந்து நீரும் வழிந்தோடியபடியே இசக்கி
கேட்டாள்.
அழுதழுதே பதட்டத்தோடே, பயத்தோடே நடந்ததனைத்தையும்
கூறினாள்.
இருவரும் உடைந்து அப்படியே அமர்ந்திருந்தனர். சில
மணித்துளிகள் கடந்தன… ஏங்கி ஏங்கி
சப்தமில்லா அழுகையுடன் இசக்கி எழுந்தாள்.
சுடலை கழுத்தில் சொறுகியிருக்கும்
அரிவாள்மனையை உறுவினாள்.
குருதி பீரிட்டது.
துணிக்கடை பிளாசுட்டிக் பையொன்றில்
அரிவாள்மனையை வைத்துக்கொண்டாள்.
மகளை “வா ட்டி” என்று கரம் பற்றி
இழுத்தாள்.

“எங்கம்மா?”

“பேசாம வா”

அரிவாள்மனை பை ஒரு கையில், மகளின் கை ஒரு
கையில்.
வேகமாக நடையைகட்டினாள்.
ஊரைத்தாண்டியாயிற்று.
நிலவொளியும், நட்சத்திர ஒளியும்
சாலையில் நடக்குமளவிற்கு வெளிச்சம்
கொடுத்தன.
நான்கு கண்களிலும் வழியும் கண்ணீர்
நிற்கவேயில்லை. காற்று வேகமாக வீசியது.
காற்றைக்கிழித்துக்கொண்டு இருவரும்
வேகமாக நடந்தனர்.
வேகமாக நடந்து ஒரு வீட்டின் கதவை
தட்டினார்கள்.
உள்ளிருந்து வெறும் கைலியணிந்தபடியே
கதவைத் திறந்தான் மதியழகன்.
இவரிருவரும் நிற்கும் கோலத்தை பார்த்ததும்
அதிர்ச்சியில் உறைந்துநின்றான் மதி…

“வா…ங்..க…எ..ன்ன்ன..இந்த.நேரத்துல?”

“எய்யா நான் சாமிய தவிர வேற
யாருகிட்டயும் எதையும் கேட்டதில்லய்யா.
உன்னய சாமியா நெனச்சி இந்த
உதவிய கேக்கேன். எம்மொவள கடைசி
வரைக்கும் கை விட்டுறாதேய்யா. இது உலகம்
தெரியாத புள்ள. எம்பிள்ளய இது
வரைக்கும் ஒரு அடிகூட அடிக்காம
நொடிக்காம வளத்துருக்கேன். நீ
நல்லாயிருப்பய்யா உசுரே போனாலும் குடிக்க
மட்டும் செஞ்சிராதே.. இந்த நாசமாபோன
குடியால இன்னைக்கு எங்குடும்பமே அழிஞ்சுபோச்சு.
எம்பிள்ளய பாத்துக்க”
சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருவரும்.

“சரி நீங்க கவல
படாதீங்க.மொதல்ல என்ன
நடந்துச்சினு சொல்லுங்க”

“அதை பெறவு எம்மொவா
சொல்லுவா. நான் வாரேன். நீ
இவள மட்டும்பாத்துக.”

“எம்மோ நீ என்னய விட்டுட்டு எங்க போறா?”

“நான் வந்துருவேன். எதுக்கும் கவலபடாதே.
நல்லா வாழுங்க மக்கா. நான்
உங்களுக்காகதான் இன்னும் உசுரோட
இருக்கேன். வாரேன் மக்கா” என்று தன் மகளை
இருக்கியணைத்து முத்தமிட்டு் அவ்விருட்டில்
வேகமாக நடந்தாள்.
அவள் நடந்த இருட்டையே மதியும் குழலியும்
பார்த்துக்கொண்டே இருந்தனர்.
சேவல்கள் தட்டிக்கூவின. கிழக்கு வெளுத்தது.
சுத்துபட்டி ஊரே ஒரே பரபரப்பாக இருந்தது.
அனைத்து நாளேடுகளிலும் செய்தி
வெளியானது.

“குடிகார கணவன் கொடுமை
தாங்காமல் அரிவாள்மனையால் கழுத்தை
அறுத்துக்கொன்ற மனைவி”
ஆம். இசக்கி காவல்நிலையத்தில்
அவ்வாறுதான் வாக்குமூலமளித்த
ுள்ளாள்.
இந்த இசக்கி இனி எப்போது விடுதலையடைவாளோ
தெரியவில்லை. ஆனால் சாதியும்
சாராயமும் ஒழியாமல் நம் மண்ணில்
இசக்கியம்மாள்களுக்கு ஒருபோதும் விடுதலையில்லை
என்பது மட்டும் திண்ணம்…
(முற்றும்)

நன்றியுடன்

செ_இன்பா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s