சுவடுகள்

inline-image-1-footprints

 

வயது மூத்து வசதிக்கேற்ப வெகுதூரம்

சென்று வாழ்ந்தாலும் பிடுங்கிய
செடியில் படிந்த மண்ணைப் போன்ற பால்ய
பருவ நினைவுகள் சில நெஞ்சில்
நிழலாடுகிறது. நினைவுகள் ஊடுருவ ஊடுருவ
மனதிற்குள் ஆழ்ந்த நிசப்தமும், பேரிரைச்சலுமாய்
முரண்படுகிறது.

என் பெயர் சுயம்பு. அப்போது ஆறாம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

கூகுள் வரைபடத்தில் கூட காண இயலாத ஒரு
குக்கிராமம் எங்கள் ஊர். நெல்லைக்கு
தெற்கே ஏறத்தாழ 60 மைல்கள் பயணிக்க
வேண்டும்.

தலைமுடியை எண்ணைய் தேய்த்து வாரி
வகுடெடுத்து, எண்ணை வடியும் முகத்தில்
கோகுல் சாண்டல் பவுடர் பூசி, நெற்றியில்
வடிவாக திருநீர் பூசி சிங்காரமாய் பள்ளிக்கு
புறப்படுவேன். துணிக்கடை மஞ்சள் பையில்
புத்தகங்களை புல்லு கட்டு போன்று அள்ளி சுருட்டி
வைத்து தோளில் தொங்கவிட்டவாறே
ஒய்யாரமாக நடந்து செல்வேன்.

குறுகிய சாலை, சாலையின் இரண்டு பக்கமும்
சிவப்பேறிக்கிடக்கும் மண். வழியெங்கும்
கள்ளிச்செடி, அடர்ந்து பரந்து விரிந்த
ஆலமரத்தடியிலும், வேப்பமரத்தடியிலும்
கம்பீரமான சுடலைமாடன் ஆலயங்களும் சில
உண்டு.

எங்கள் ஊரிலிருந்து சுமார் ஒன்றரை மைல்
தொலைவில் உள்ளது எனது
பள்ளிக்கூடம். அந்த பகுதியில் பிரசித்தி
பெற்ற அரசுப் பள்ளி அது.
வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட
கட்டடமாயினும் அத்தனை
பிரமாண்டமானதல்ல. ஓடுகளால்
வெய்யப்பட்ட மூன்று பெரிய
வரவேற்பறைதான் மொத்த பள்ளியும்.

ஆங்கிலமோகம் அதிகமில்லாத காலகட்டமது,
கல்வி அப்போது வியாபாரமாக்கப்படவில்லை.
இப்போது கற்பனையில் கூட காண இயலாத
அளவிற்கு மாணவர்கள் எண்ணிக்கை
கூடுதலாக உண்டு.

மூன்று பெரிய அறைகளிலும் பிரமாண்ட
பலகைகளை ஒவ்வொன்றாக வைத்து
ஒவ்வொரு அறையையும் வகுத்திருந்தார்
கள்.

அங்கு ஐந்தாம் வகுப்பிலிருக்கும் மாணவன்
சாதுர்யமானவனெனில் ஆறாம்
வகுப்பு பாடத்தையும் ஐந்தாம் வகுப்பிலேயே
கற்றுக்கொள்ளலாம். அத்தனை
அசௌகரியத்தில்தான் அன்றைய மாணவன்
மட்டுமின்றி ஆசிரியரும் இருந்தார்கள்.

இசக்கியப்பன் என்றொரு ஆசிரியர்.

அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே
நாங்களெல்லாம் குதுகுலமாகிவிடுவோம்.
காரணம் மாணவர்களோடு
மாணவர்களாக இருந்து மாணவர்களுக்கு
கற்பிக்கும் மகத்தான ஆசிரியர் அவர்.

“FASHION” என்ற ஆங்கில பாடம்
நடத்திக்கொண்டிருந்தார்.

“Fashionனா என்ன? நாகரீகம். நாகரீகம் எப்டிஉருவாகிறது…? யாருக்காவது
தெரியுமா?” ஆசிரியர் தனக்கே உரிய
பாணியில் கேட்டார். அணிச்சையாய்
அவ்வப்போது தன் மூக்குக்கண்ணாடியை
சரிசெய்துகொண்டார்.
மாணவர்கள்

மத்தியில் மூச்சு பேச்சில்லை.
ஆசிரியர் தொடர்ந்தார்.

“ஒருவன் தெருவில் நடந்து போயிட்டுருந்தான்.
அவன் போட்டுருந்த சட்டை லேசா கிழிஞ்சுருந்துச்சு.
அதை ஒருத்தன் பட்டிக்காட்டான்
மிட்டாய்கடைய பாக்குற மாதிரி குறுகுறுனு
பாத்துட்டே இருந்தான்.

‘இந்த மாடல் நல்லாருக்கே’னு பாத்தான்.

அடுத்து சட்டைய கிழிச்சே தச்சான்.

இவ்வாறு நாகரீகங்கள் பரிணாமமடைகிறது”
. என முடித்தார்.
நான் அவ்வளவு துணிச்சலானவனெல்
லாம் கிடையாது. ஆயினும் அந்த ஆசிரியர்
மாணவர்கள் எதிர் கேள்வி கேட்குமளவிற்கு
கொடுத்திருந்த சுதந்திரம் என்னை
சட்டென எழ வைத்தது.
“சார் ஒரு டவுட்டு சார்”

“ஏலேய் சொயம்பு ஆச்சர்யமா
இருக்குலே மக்கா. கேளுல”

“சார் நேத்து எங்க தெருவுல ஒரு சின்ன
பய நடந்து போயிட்டு இருந்தான். அவன் நடக்கும்
போதே அவன் போட்டுருந்த டவுசர் உருவி விழுந்துட்டு.
எவனாவது இதை பாத்தா இது கூட புது
ஃபேஷனாயிடுமா?”
வகுப்பரை முழுக்க பலத்த சிரிப்பொலி.

ஆசிரியரும் தன் பங்குக்கு சிரித்துவைத்தார்.

“ஏலே ராசா நீலாம் பெரிய
விஞ்ஞானியாதாம்லே வருவா” என்று கூறி
சிரித்தபடியே என் முதுகில் செல்லமாக
தட்டினார்.

“சரி சிரிச்சது போதும் பாடத்த கவனி” என
ஆசிரியர் கூற வகுப்பரை அமைதியானது.
ஒரே ஒரு மாணவி மட்டும் சிறு சிணுங்கள் போன்ற
சிரிப்பை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பெயர் மணிமேகலை. மேகலா என்று
அனைவரும் அழைப்பர். தெத்துப் பற்களும்,
மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு, வெள்ளை
இந்நான்கு வண்ணங்களையும் ஒன்றாக
உரலில் ஊர வைத்து இடித்தால்
ஒரு நிறம் கிடைக்கும் அந்த நிறம்தான் அவள்
நிறம்.

அடைமழையில் நணைந்த பனை
மரத்தையொத்த அடர் கருப்பு
நிறம்தான் நான். எங்களிருவரையும் ஒருசேரப்
பார்த்தால் திமுக
கொடியையொத்து இருக்கும்.
விஷயத்திற்கு வருகிறேன். அன்று அந்த மாயச்
சிணுங்களின் மந்திரமோ என்னவோ அனுதினமும்
அவளை கவனிக்க ஆரம்பித்தேன். திண்ணமாகச்
சொல்கிறேன் இது காதலில்லை. ஏதோ
அசுரக் காற்றில் உயரேப் பறக்கும் பாலித்தீன்
பையைப் போன்றதொரு நிலை. எப்போது
வேண்டுமானாலும் தரையில் தவழும்
துர்பாக்கிய நிலையில்தான் இருந்தேன்.

பொதுவாகவே இக்கால
மாணவர்கள் போன்றவர்களல்ல அப்போதைய
மாணவர்கள். இப்போது ஒரே இருக்கையில் கூட
ஆணும் பெண்ணும் சேர்ந்தே
இருக்கிறார்கள், நாங்கள் மாணவிகளிடம்
பேசுவதற்கு கூட கூசுவோம், எங்களில் ஓரிருவரே
மாணவிகளிடம் இயல்பாக பேசுவார்கள்.

அவர்களுக்கு நாங்கள் வித்யாசமான
பெயர்களைச் சூட்டி எள்ளிநகையாடுவதும்
உண்டு.

நிலை இவ்வாறிருக்க மனதளவில் சஞ்சலப்பட்ட
பெண்ணிடம் இயல்பாக பேசுவது நடக்கிற
விஷயமா என்ன…?
இவ்வண்ணமே ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம்
வகுப்பு, ஏழாம் வகுப்பு முடிந்து எட்டாம்
வகுப்பை எட்டியாயிற்று.
எட்டாம் வகுப்பு ஏறத்தாழ இறுதி கட்டத்தை
நெறுங்கியாயிற்று; அவளை உருகி உருகி
காதலிக்கவேண்டும், திருமணம் முடிந்து அவளோடே
வாழ வேண்டுமென்ற
எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது.

ஒருவேளை அந்த வயது அவ்வாறான
நினைப்புக்கு லாயக்கற்றவையோ என்னவோ… ஏதோ
ஒரு மர்ம ஆசை. அதை வார்த்தையால்
வடிப்பதொன்றும் அத்தனை
எளிதானதல்ல.
சுற்றுவட்டார பள்ளிகளையெல்லாம்
இணைத்து கபடிப் போட்டி எங்கள் பள்ளியில் வைத்து
நடந்தது. எங்கள் பகுதியில் கபடிப் விளையாட்டு
அறியாத சிறுவர்களோ, இளைஞர்களோ இல்லை
என்றே சொல்லலாம். தமிழனின்
பாரம்பர்யத்தின் எச்சமான கபடி
விளையாட்டு அவ்வளவு பிரசித்தம் எங்கள்
மண்ணில்…
வாழ்வில் நாம் அதீதமாய் மகிழ்ச்சியில்
திளைத்த நாட்களை நாம் விரல் விட்டு
எண்ணிவிடலாம். அப்படியொரு
நாள் அது.
எங்கள் பள்ளி கபடி அணியில் நானும்
ஒருவன். என் வகுப்பிலிருந்து நான் மட்டுமே.
அன்று போட்டி ஆட்டங்கள் வெகு
உற்சாகமாய் நடந்தது. எங்கள் பள்ளி
என்பதால் எங்கள் அணிக்கு ஏகபோக ஆதரவுக்
குரல். விளையாட்டில் மிகுந்த சிரத்தையோடு இருப்பது
போன்று கடிணப்பட்டு நடித்தேன்.
ஒவ்வொரு முறை பாடிச்
செல்லும்போதும் “மேகலா என்னைப்
பார்க்கிறாள்” என்ற சிந்தனையிலேயே
செல்வேன். எப்படியோ ஓரளவு
சொதப்பாமல் சமாளித்தேன்.
ஒவ்வொரு முறையும் புள்ளிகளைப்
பெறும்போதும் மேகலாவின் கைத்தட்டல் ஒசை
மட்டுமே காதில் ஒலித்தது.
அன்றைய போட்டியில் எங்கள் அணி இரண்டாம்
பரிசு பெற்றது. சாயங்காலம் பரிசளிப்பு
நடைபெற்றது. ஆளுக்கொரு சிறிய
கோப்பையும் சான்றிதழும் கிடைத்தது.

நான் கோப்பையை வாங்கும் போது திடீரென
பலத்த கரகோசை. எனக்கு ஆச்சர்யம். எனக்கு
மட்டும் ஏன் இத்தனை பெரிய கைத்தட்டல்.
இரையை வேகமாக உண்டு பின்பு மெதுவாய்
அசைபோடும் மாடுகளைப் போல அங்கு கைத்தட்டிய
குழுவை யோசித்துப் பார்த்தேன்.
அவர்கள் அனைவரும் என் வகுப்பு மாணவிகள்.

மிக உற்சாகமாய் கைத்தட்டியது சாட்சாத்
மேகலாவேதான். அதே தெத்துப்பற்கள்
மின்ன பிரகாசமாய் சிரித்தபடி
ஓ……வென கூச்சலிட்டவாறே…
நான் எங்கேயோ மேலே பறந்தேன். பெருமிதம்
தாங்கவில்லை, மகிழ்ச்சி கட்டவிழ்த்து விட்டக்
காளையைப் போன்று கரைகடந்து ஓடுகிறது.
இரவெல்லாம் தூக்கமே இல்லை. நான்
விளையாடிய சிறப்பான சில தருணங்களும்,
மேகலாவின் தெத்துப்பல் சிரிப்பும் என்
உறக்கத்தை முற்றுலுமாய் சிதைத்துவிட்டது.
எட்டாம் வகுப்பு முழுவாண்டுத் தேர்வுக்கு சில
நாட்களே உள்ள நிலையில் பிரியாவிடை நிகழ்ச்சி
ஏற்பாடானது. குளிர்பாணங்களும்,
நொறுக்குத்தீணிகளுமாக விழா
வயிற்றுக்கு வாட்டமின்றி
தொடர்ந்தது.

மாணவர்கள் ஒருவருக்கொருவர்
பரஸ்பர அன்பை காகித்தில்
எழுதிக்கொடுப்பது வழமை.
பல நண்பர்கள், நண்பிகள் எழுதித் தந்தனர் .
என் எதிர்பார்ப்பு மேகலா. கடைசி
பேருந்திற்காக ஆளரவமற்ற கும்மிருட்டு
நிறுத்ததில் நிற்பது போன்று தவித்து நின்றேன்.

யாரிடமோ எதையோ பேசி மிச்சம் வைத்தவாறு
படபடவென வந்தாள் மேகலா.

“ஏய் சொயம்பு என் நோட்டுல ஏதாவது
எழுதி தா” என்றாள்.
நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.
ஆறுதலடைந்தேன்.

“தா எழுதித்தாரேன். ப்டியே நீயும் எனக்கு எழுதி
தா” என்று என் கையிலிருந காகிதக்
கொத்தை அவளிடம் அளித்தேன்.
அவள் எழுதிக்கொண்டிருந்தாள்.
‘எல்லோருக்கும் எப்படி எழுதிக்
கொடுத்தேனோ அப்படியே எழுதலாமா,
அல்லது அவளின் மீதான ஈர்ப்பை இதன்மூலம்
தெரியப்படுத்தலாமா என சில விநாடி
பட்டிமன்றம் மனதிற்குள் வெகு சிறப்பாய்
நடைபெற்று ஒரு தீர்மானத்திற்கு வந்தது.

“ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம்
வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம்
வேண்டும் ”
என எழுதினேன். எஜமான் படம்
வெளியான நேரம் அது
என் காகிதக் கொத்தை என்னிடம்
கொடுத்தாள். திறந்து பார்த்தேன் .
“Best of luck”
என்றும் அன்புடன் மேகலா என்று
எழுதியிருந்தாள்.
அவளுக்கு நான் எழுதியதை அவளிடம்
கொடுத்தேன். அவள் திறந்து
பார்க்காமலே “வரேன்” என
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

“பார்க்காமலே சென்றுவிட்டாளே! எப்போது
பார்ப்பாள்? நிச்சயம் இரவாவது
பார்ப்பாள்.
சிறு சிறு தீவுகளை சுனாமிப் பேரலை சூழ்ந்ததைப்
போன்று மனதிற்குள் அவளே முழுவதுமாய்
ஆக்கிரமித்திருந்தாள்.

மறுநாள் வானம் எப்போது
வெளுக்குமென இரவு முழுக்க மனசு
ஏக்கத்தில் தவித்தது தூக்கத்தை
தொலைத்து.
மறுநாள் தார்சாலையில் வெள்ளை
சாயம் பூசியது போன்று சற்று அதிகமாகவே
பவுடரை பூசி பள்ளிக்கு சென்றேன். மகிழ்ச்சி,
பதட்டம், அசட்டுத்துணிவு, ஒருவேளை
நிராகரிக்கப்பட்டால்? என்ற கவலை என
அனைத்து உணர்ச்சிகளும்
ஆட்கொணர்வு மனுவளித்து என்னை
ஒரு வழியாக்கியது.
நான் எனது வகுப்பரை வாசலிலேயே நின்றேன்.
இன்று சற்று சீக்கிரமாகவே வந்துவிட்டேன்.

மாணவர்கள் ஓரிருவரே வந்திருந்தனர். அவள்
வருகைக்காய் வாடி நிற்கும் கொக்கைப்
போல நின்றுகொண்டிருந்தேன்.
ஒருவழியாக வந்தாள். அதே
ஆட்கொணர்வு தம்பட்டமடிக்கத்
துவங்கியது. என்னை நெருங்கிவிட்டாள்.
நான் அவளையே
வெறித்துக்கொண்டிருந்தேன்.
இயல்பாய் ஒரு புன்னகையை உதிர்த்து என்னை
கடத்து சென்றாள்.
அந்த புன்னகையே எனக்கு புதையல் கிடைத்தது
போன்றதொரு மகிழ்ச்சியை தந்தது.

முழுவாண்டுத் தேர்வுக்கு ஓரிரு நாட்களே உள்ள
நிலையில் வகுப்பரையில் எப்போதுமே
படித்துக்கொண்டேயிருக்குமாறு
அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களும்
நிர்பந்தித்தனர்.
புத்தகத்தை மேசையில் வைத்துக்கொண்டு
கண்களை மேகலா மீது வைத்திருந்தேன்.

அவளும் என்னை அவ்வப்போது நிமிர்ந்து
பார்ப்பாள். நான் அவளையே பார்ப்பதை
அவள் நெறுங்கிய தோழியிடம் ஏதோ
செய்கையில் சுட்டுவாள்.
நானென்ன அதற்கெல்லாம்
அஞ்சிய ஆளா என்ன? என் பார்வை அவளை
விடுத்து மாறுபடாது ஆசிரியர்
கண்டுபிடிக்காத வாறே சாதுர்யமாக.
.

இவ்வாறே சுவாரஸ்யமாக
சென்றுகொண்டிருந்தது. தேர்வு
நாளும் வந்தது. அவளை படித்தேன். தேர்வில் ஏதோ
எழுதினேன்.

கடைசி நாள் சமூகவியல் பரீட்சை நடைபெற்றது.
நான் எழுதியும் எழுதாமலும் அவசர
அவசரமாக எழுதி தேர்வுத்தாளை
கண்காணிப்பாளரிடம் அளித்துவிட்டு
வெளியேறினேன்.

இன்று அவளிடம் எப்படியாவது முழுவதையும்
பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
அவள் வருகைக்காக பள்ளியின் முகப்பு
வாசலின் அருகேயுள்ள ஒரு வேப்ப மரத்தின் மீது
சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன்.
பரீட்ச்சை

முடிந்ததாக பள்ளியின் மணி ஓசை
கூறியது.

வந்துகொண்டிருந்தனர். எனது
தோழர்கள் சிலர் எனக்கு கையசைத்த வாறே
சென்றுகொண்டிருந்தனர்.
ஓரிருவர் என்னை நோக்கி வந்தனர். அவர்களிடம்

“நீங்க போங்க நான் வரேன்” என்பது போல்
கையசைத்து சாமர்த்தியமாக நழுவினேன்.

தன் தோழி ஒருத்தியிடம் வினாத்தாளை காட்டி
ஏதோ பேசிக்கொண்டே நடந்து
வந்துகொண்டிருந்தாள் அதே
தெத்துப் பற்கள் மின்ன,
மென்மையான கண்கள்
கொஞ்ச. மரத்தில் சாய்ந்திருந்த
நான் அவளை பார்ந்ததும் எழுந்து ஒழுங்காக
நின்றேன்.

அங்கிருந்தே யதேச்சையாய் என்னைப்
பார்த்துவிட்டாள். அந்த சிரிப்பு இன்னும்
வசீகரமானது. அவள் என்னையே
பார்த்துக்கொண்டே வந்தாள்.
வாய் ஏதோ அவள் தோழியிடம்
பேசிக்கொண்டே இருந்தது.
என்னை நெருங்கினாள்.

“மேகலா…” அழைத்தேன் நான்.”.

“நீ போ நான் வாரேன்” என தன் தோழியிடம்
கூறிவிட்டு என்னிடம் வந்தாள்.

“சொல்லு சொயம்பு. பரிச்ச
எப்டி எழுதியிருக்கா?”

“ம்ம் ஏதோ எழுதிருக்கேன். ஒங்கிட்ட ஒண்ணு
பேசணும் ”

அவள் கண்களில் லேசான நாணம், இதழில்
லேசான துடிப்பு, முகம் லேசாக சிவந்ததிருந்தது.
“ம்ம் சொல்லு சொயம்பு”
எனக்கு பதட்டமோ, பயமோ எதுவுமே இல்லை.
எப்படியாவது சொல்லிவிட
வேண்டுமென்ற படபடப்பு மட்டுமே இருந்தது.

“நா ஃபேரவல் டே’யில உன் நோட்டுல எழுதி தந்தத
படிச்சியா?”

“ஆமா படிச்சேன்”

“ஒண்ணுமே சொல்லல…?”

“ம்ம்ம்… சொல்லியேன். அடுத்து எந்த
ஸ்கூல்ல படிக்க போறா?”

“நீ எங்க படிக்க போறா?”
பள்ளியின் பெயரைச்
சொன்னாள்.

“அப்ப நானும் அங்கதான் படிப்பேன்”

“நம்ம ஒம்போதாம் வகுப்புல சேந்தததும்
சொல்லியேன்”

“அது வரைக்கும் எப்டி தாக்குபிடிக்க போறேன்?”
சட்டென மனதிற்குள் வந்தது அதுதான்.

“சரி உன் வீடு எங்க இருக்கு?”

“எதுக்குலே?”

“இல்ல லீவுல எப்பயாவது வந்தா
பாக்கதான்”

“நான் லீவுல தூத்துக்குடிக்கு எங்க பாட்டி
வீட்டுக்கு போயிருவேன். லீவு முடிஞ்ச
பொறவுதான் வருவேன்”

“ம்ம்ம்… வா ஒனக்காக காத்துட்டே
இருப்பேன்………..
லேசான ஒரு சிணுங்கள் சிரிப்பு.

“சரி வீட்ல தேடுவாவ நான் வாரேன் என்ன”

என்றவாறே என் பதிலுக்குக் காத்திராமல்
சென்றாள்.
போகும் போது அவ்வப்போது திரும்பித் திரும்பி
பார்த்தாள் அதே தெத்து பற்கள்
மின்னுகிறது, அந்த கண்கள் ஏதோ கவிதை
வாசிக்கிறது. என் வண்ணத்துப்பூச்சி என்
இதயத்தில் தன் சாயத்தை பூசிவிட்டு
செல்கிறது.
இரண்டு மாத விடுமுறையில் அப்பாவோடு
தோட்டத்திற்கு செல்வேன். அங்கே கள்ளிச்
செடிகள்தான் வேலிகள். அந்த கள்ளிச்
செடிகளிலெல்லாம் நாட்டுக்
கருவேலமர முள்ளெடுத்து அவள் பெயரை
கிறுக்கினேன். ஏறத்தாழ கிறுக்கனாகவே
ஆனேன்.
இரண்டு மாதத்தில் அவள் நினைவின்றி ஒரு
நாளில் ஒரு மணி நேரம் கூட நகராது.

ஒரு வழியாக பள்ளியை திறந்துவிட்டார்கள் .
ஒன்றாம் வகுப்பு முதலே விடுமுறை முடிந்து பள்ளி
திறக்கும் போது என் கரம் பிடித்து என் தந்தை
நடக்கும் போது சுடலை மாடனுக்கு கெடா
வெட்ட அழைத்து செல்வது போன்றே
எனக்கு தோன்றும். ஆனால் இன்று
இளவரசனுக்கு பதவிப்பிரமானம் செய்து
வைக்க அழைத்து செல்வது போன்ற ஒரு
உணர்வு.

பள்ளியில் சேர்ந்த அந்த கணம் முதல் என்
மேகலாவையே தேடினேன். என் வகுப்பில் அவள்
இல்லை. 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் உண்டு.
ஒவ்வொன்றாய் தேடினேன். அவள்
இல்லை.

வாழ்கையில் முதன் முதலாய் இதயம்
கணத்தது. மறுநாள் தேடினேன். அவள்
வரவில்லை. இவ்வாறு ஒரு வாரம்
சென்றது. என் மேகலாவை மன்னிக்கவும்
மேகலாவை காணவில்லை.
அவள் தோழி 9C வகுப்பில் இருந்தாள். மதிய
உணவு வேளை ஒன்றில் அவளிடம் கேட்டேன்.
அப்போதுதான் “அவள் அந்த ஊர்
தபால்காரர் மகள் என்றும், அவருக்கு
இடமாற்றம் கிடைத்து வெளியூர்
சென்றுவிட்டதாகவும் கூறினாள்.
அணை மீறும் நீரைப்போன்று கட்டுப்படுத்த
இயலாமல் கண்ணீர் இமை மீறியது. அந்நேரம்
மட்டுமல்ல அன்று முதல் பல நாட்கள்.

ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள
முடியாத வயது பாவம் என்ன
செய்யும்…?
மேலே போகும் எதுவும் கீழே விழும் என்பது நியூட்டனின்
விதி மட்டுமல்ல மனிதர்களின் தலைவிதியும்தான்
. நான் மட்டும் விதிவிலக்கா என்ன…
நினைவுகள் எப்போதுமே விநோதமானவை…
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து
அழவைக்கும், சில நேரங்களில் அழுத நாட்களை
நினைத்து சிரிக்க வைக்கும். அவை சுவடுகளாக
சுவையாகவும், சுமையாகவும் அவ்வப்போது
சிலிர்ப்பூட்டும்…

அன்புடன்

செ. இன்பா

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s