பேரச்சம்..!!

shutterstock_185032865-700x467

 

“சார் எங்கே எறக்கி விடணும்?”

“அந்த முக்கு ரோட்டுல விடுப்பா”

“சரிங்க சார்”

மகிழுந்து சர்ரென பாய்ந்தது. சுமார்
பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.

“சார் இங்கதான?”

“ஆமாப்பா. ரொம்ப நன்றி.
என்னைய கொண்டு விட்டத
யாருகிட்டயும் சொல்லிடாத.
யாராவது கேட்டா நா
சொல்லிக்கிறேன்”

“சரிங்க சார். இந்த ராத்தியில அதுவும்
பயங்கர இருட்டா இருக்கு, வழியில
நெறயா நாய்ங்க இருக்கும், தனியா
வேற…”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சன
இல்லப்பா. நா பாத்துக்குறேன்”

“சரிங்க சார் பாத்து போங்க”

“ம்ம்ம்”

கும்மிருட்டு, ஆளரவமற்ற பாதை, தமிழகத்தின்
பிற பகுதிகளை போன்றே நாய்கள்
தொல்லை.
மெல்லிய அச்சம் குடிகொண்டது
பொழிலனுக்கு.
இருந்தும் அச்சத்தை விட அவன் மனைவி

“ஏங்க எந்நேரமானாலும் பரவால
வந்திடுங்க”
என கூறியது காதில்
ஒலித்துக்கொண்டே இருந்தது.

“கல்யாணமாகி அம்பது நாளுதான்
ஆகுது. அதை கூட புரிஞ்சுக்காம இந்த மங்குனி
மேனேசர் நைட் டூட்டி போட்டுட்டானே படுக்காளி பய.
பகல்ல வேற வூட்டுல நெலவரம் சரியில்ல.

ச்சே பத்து ரூவா சம்பாதிக்க என்ன
பாடுலாம் பட வேண்டியிருக்கு.
விறுவிறுவெற நடந்துகொண்டே
கடிந்துகொண்டான்.
அழகிய கிராமம்தான் ஆயினும்
இரவென்றால்… சற்றே திகில் வருவது
இயல்புதானே? நெறுக்கமான
வீடுகளில்லா வீதிகள். சிறிது தூரம்
நடந்துதான் செல்ல முடியும். மின் தேவைக்கு
என கூறி அணுஉலைகள் கோலோச்சும் இந்நாட்டில்
கிராமங்களின் இருட்டுகள் நாம்
அறிந்ததுதானே?

40% ஆசையும், 20% வீரமும் மீதமுள்ள 40%
அச்சத்தை வென்று பொழிலனை
வேகமாக நடக்க வைத்தது.
ஊஊஊஊ…வென நாய்கள் எங்கிருந்தோ
ஊளையிடும் சப்தம் பொழிலன்
காதுகளில் ரீங்காரமிடுகிறது.
அச்சத்தின் அளவு சற்று அதிகமானது. அரை
வட்ட நிலவொளி மட்டுமின்றி வேறேதும்
வெளிச்சமில்லை.

“திடீரென நாய்கள் முற்றுகையிட்டால்
என்ன செய்வது? ம்ம்ம்… கற்களை எடுத்து
கையில் வைத்துக்கொள்வோம்”

நடக்க நடக்க சில பல கற்களை சேகரித்து கையில்
வைத்துக்கொண்டான்.
வீசும் காற்றின் வேகம் புதிய திகிலிசையை தந்தது.
சர்ரட்.. சர்ரட்…சர்ரட்..
அவன் நடக்கும் ஓசையே அவனுக்கு பல திகில்
படங்களின் பின்னணி இசையை நினைவூட்டியது.
நாய்களின் ஊளைச் சத்தம் சற்று வேகமாக
கேட்டது.
நாற்புறங்களிலும் இருட்டு. அருகில் வீடேதும்
இல்லை. மருந்துக்கூட உதவிக்கு ஆட்களில்லை.

“ஊளையிடும் சத்தத்தை பார்த்தால் எப்படியும்
நான்கைந்து நாய்கள் இருக்கும். எப்படி இந்த
கொடூர பயத்திலிருந்து தப்புவது?

“அப்பனே முருகா… என்னய நல்லபடியா
வீட்டுல கொண்டு சேத்துரு வர்ர
வெள்ளிக்கிழமையே நானும்
எம்பொண்டாட்டியும் உன்
சன்னதிக்கு வாரோம்யா..”

முன்னோக்கி செல்ல செல்ல
நாய்களின் ஓசை இன்னும் வேகமாக
எழும்பியது.
இருபதடி தூரத்தில் அவன் எண்ணியபடியே
நான்கைந்து நாய்கள்
நெஞ்சில் நான்கு கிலோ சுத்தியலை வைத்து
அடிப்பது போன்று இதயம் படபடத்தது. “நம்ம
ஓடுனாதான் நாய் நம்ம வெரட்டும்னு
ரண் படத்துல ரகுவரனே
சொல்லியிருக்காரு. எந்த காரணத்தை
கொண்டும் ஓடிடாதேடா
பொழிலா..”

நாய்கள் இவனை நோட்டமிட்டது.. இவனுக்கு கை,
கால்கள் உதர ஆரம்பித்துவிட்டது. “ஒருவேளை
என்னய நோக்கி பாய்ஞ்சுருமா… முருகா
காப்பாத்து”

ங்ங்ர்ர்ர்ர்ர்ரென அதிலொரு
செவலை நாய் இவனை பார்த்து உறுமியது.
இவனுக்கு அடிவயிற்றில் ஏதோ
கடமுடாவென சத்தம் கேட்டது. கையில்
வைத்திருந்த கற்களை தயார் நிலையில்
வைத்துக்கொண்டான்.
நாய்கள் பெரும் சத்தத்துடன் குரைக்கத்
துவங்கியது. பொழிலன் முன்னேறுவதை
நிறுத்தவில்லை.

” நாய்களும் இவனை நோக்கியே முன்னேறியது.
பேரச்சத்தின் வெளிப்பாடாக குளிர்ந்த
காற்றுகள் வீசிடினும் பொழிலன்
உடலில் வெப்பம் அனலாகி வியர்வை
வழிந்தோடியது.
நாய்கள் இவனை தொடும் அளவிற்கு
நெறுங்கி பெரும் ஓசை எழுப்பியது.
கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளை போல
நடுக்கத்தை உடலில் காட்டாமல் நடையை
தொடரந்தான். நாய்களும் இவனை
பின் தொடர்ந்தது.
மரண பீதியிலும் தளராமல்
நடத்துகொண்டே இருந்தான்.

சிறிய தூரம் கடந்ததுமே நாய்கள் அவ்விடத்திலேயே
நின்றுகொண்டது.

ஏற இறங்க மூச்சி வாங்கியபின் சற்று
ஆசுவாசமாகிக்கொண்டான்.
‘அப்பனே முருகா எனக்கு பொறக்க
போற புள்ளைக்கு உன் கோயில்லயே மொட்ட
போடுறேம்பா” வேண்டிக்கொண்டான்.

மீண்டும் மனைவியின் குரல் மனதில் ஒலித்தது.
ஆசையின் அளவு இப்போது 60% ஆனது. இன்னும்
கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு
போயிடலாம். அப்புறம்…… மனம் முழுக்க விரக
தாபம்.
நடை இன்னும் வேகமானது. தூரத்தில் ஒரு
தெரு விளக்கு எரிந்துகொண்டிரு
ந்தது.
அது ஒரு முச்சந்தி. அந்த விளக்கின் ஒளியில்
சிவப்பு ஆடையணிந்த ஒரு உருவம் தெரிந்தது.
கூர்ந்து நோக்கினான். முகம் மட்டுப்படவில்லை.
உருவம் மட்டுமே தெரிந்தது.

“இந்நேரத்துல இங்க யாரு இருப்பா? நம்மூரு
பொம்பளைங்களுக்கு இந்த ராத்திரி
இதுல நிக்கிற அளவுக்கு துணிச்சல் கிடையாதே..
ஒருவேளை…
இந்த ஏரியாவுல எப்பயும் பத்து காவாளி
பயலுக கும்மாளம் போடுவானுங்க. அவனுங்க
எதுனாவது ஐட்டத்த தள்ளிட்டு
வந்துட்டானுங்களா…?”
நெறுங்கி வர வர உருவம் இன்னும்
பிரகாசமானது. “அட கருமமே இன்னைக்கு
யாரு மொகத்துலடா முழிச்சேன்?”

இன்னும் சற்று தூரம் சென்றான். உருவம்
தத்ரூபமாக தெரிந்தது. இவனுக்கு
உடலெல்லாம் சிலிர்த்தது.
சிவப்பு ஆடையில் சிங்காரமான தோற்றம்.
வறுமையும், செழிப்பும் ஒன்றுகூடிய
வதவதப்பான தேக அமைப்பு.
முகத்தை கூர்ந்து கவனித்தான். தன் கருகரு
கூந்தலை முகத்தின் மீது படரவிட்டிருந்தாள்.

“வித்யாசப்படுதே!”
மிக அருகில் வந்துவிட்டான். மனதில் டிங்டாங்
அச்ச மணி மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.
தலையை மேலும் கீழுமாக அசைத்து “என்ன?” என
கேட்டாள். பொழிலன் பதிலேதும்
பேசாமல் தவறு செய்து ஆசிரியரிடம்
மாட்டிக்கொண்ட மாணவனைப் போல
விக்கி விறைத்து நின்றான்.
இகாகாகாவென கெக்கலிட்டு
சிரித்தாள்.

“ஆஆஆஆஆஆஆஆ பேயி… என அலரியடித்து
பின்னோக்கி ஓடினான் பொழிலன். சிறு
தூரம் சென்று திரும்பி பார்த்தான். அவள்
அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். “இதை தாண்டி பின்னால்
சென்றால் நாய்கள். முன்னோக்கி
சென்றால் பேய். என்ன செய்வது?
பொழிலனின் கையறு நிலை கண்டு
கதிகலங்கி நின்றான்.

“உண்மையாவே இது பேய்தானா? பேய் அப்டீனு
ஒன்னு உண்டா? செத்து போனா பேயா
அலைவாங்களா? ஈழத்தில் ஒன்னே முக்கால்
இலட்சம் பேரை கொன்னானுங்க.
அவங்களாம் பேயா வந்தால் ராசபக்சே
இன்னுமா உசுரோட இருப்பான்? ஆனாலும்
பேய் இருக்குதுனு அமெரிக்கா காரனே
ஒப்புக்கொண்டுட்டானே? மிக
முக்கியமானது இந்த நேரத்தில் ஒரு பெண்
எப்படி இங்கே?”

பல கேள்விகளுக்கிடையே பேய்தான்
என தீர்மானத்திற்கு வந்தான். சரி அப்படியே
பேயா இருந்தாலும் இது யாரா இருக்கும்?
நம்ம ஊர்ல இப்படி ஒருத்தி இல்லையே? இவள்
அங்க அசைவுகளை எங்கேயே பார்த்திருக்கிறேனே!
எங்கே? எங்கே? எங்கே…?
அய்யோ…! இயல் தானே இவள்? ஆம் என்
இயலிசையே தான். நெஞ்சில் அச்சம் மறைந்து
கண்ணில் நீர் நிறைந்தது பொழிலனுக்கு.
___________________________________
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.
(பின்னோக்கி செல்வோம்)
நடுக்கத்தோடு கை பேசியில் பத்து எண்களை
அழுத்தினான் பொழிலன்.
டிரிங்…. டிரிங்…. டிரிங்… சில பல மணியடித்தது.

“அலோ யார் நீங்க”
(மாதா கோவில் மணி ஓசை போல அத்தனை
சுகமான குரல்)

“அலோ நீங்க யாரு?”
சில நொடிகள் பதிலில்லை.

“அலோ சார் நீங்கதானே போன் போட்டீங்க?
யார்னு சொல்லுங்க இல்லேனா போன
வையுங்க”

“நான்… நான்…”

“ஏலேய் எவம்ல நீ? வந்தேன்…
வெளுத்துபுடுவேன் ராசுக்கோல்”

“அலோ என்ன திடீர்னு ஆம்பள குரல்ல பேசுறீங்க?
நீங்க இயலிசை தானே?”

“லேய் நான் அவ அப்பன் பேசுதேம்ல, நீ
யாருலே?”
(அட கருமமே அப்பனா)

“நான்… நேத்து பொண்ணு பாக்க
வந்தேம்லா. பொழிலன் பேசுதேன்”

“அட நீங்களா? மொதல்லயே
சொல்லியிருக்கலாம்ல. என்ன
விசயம் சொல்லுங்க?”

“இல்ல இயல் கிட்ட கொஞ்சம்
பேசணும்… அதான்”

“அதான் கல்யாண தேதிலாம் குறிச்சாச்சே
அப்புறம் ஏன் இவ்ளோ தயக்கம்? இந்தா
கொடுக்குறேன். ஏம்மா இயலு மாப்ள
உங்கட்ட ஏதோ பேசணுமாம்.”

“அலோ. சொல்லுங்க நான் இயல்
பேசுதே”

“இல்ல பேசணும்னு தோணுது. ஆனா என்ன
பேசுறதுனு தோணல. உனக்கு எதாவது
தோணுதா?”

“ஆமா.எனக்கு ஒன்னு தோணுது”

“என்ன தோணுது?”

“நீங்க ரொம்ப தைரியசாலினு தோணுது”

“எப்படி கண்டுபிடிச்ச?”

“இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு? நேத்து
நான் உங்கள பாத்துட்டே இருந்தேன். நீங்க
யாராவது பாக்குறாங்களானு பாத்து
பவ்யமா எப்பயாவது லுக்கு விட்டீங்க.
அப்புறம் நீங்க தனியா பேச ஆசைப் படுவீங்கனு
ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா
நீங்க வரவே இல்ல. உங்க முகம் வேற
படபடப்பாவே இருந்துச்சு.”

“(அடங்கொய்யால என்னய
பயந்தவன்னு சொல்றததான் இவ்ளோ
பில்டப்பா சொன்னியா?)”

“சரி இயல் சொல்லு. என்னய உனக்கு
பிடிச்சிருக்கா?”

“எனக்கு உங்களை பத்தி
இன்னொன்னும் தோணுதுங்க”

“என்ன என்ன சொல்லு”

“நீங்க ஒரு ட்யூப் லைட்னு தோணுது”
(உஷ்ஷ்ஷ்….)

“ஏன்? எனக்கு உன்னய ரொம்ப
பிடிச்சிருக்கு. நீ எனக்காகவே பொறந்த
பொண்ணு”

“நான் பொண்ணு இல்லங்க. உங்க
பொண்டாட்டி”
பேச்சு இனிக்க இனிக்க நீண்டுகொண்டே
சென்றது.

திருமணம் நான்கு
மாதத்திற்கு பிறகுதான் என்று இரு
வீட்டாரும் பேசி வைத்திருந்த நிலையில்
இவ்விருவருக்கும் கைபேசியே கடவுளானது.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை அயராது
உழைத்தார்கள் ஏர்டெல்
கம்பெனிகாரனுக்காக.
இருவருக்குள்ளும் அன்பு அதீதமானது. எல்லா
ஆண்களையும் போல பள்ளி, கல்லூரி என பல
கட்டங்களில் பல பெண்களை
கடந்திருந்தாலும் மனைவி என தெரிந்தால்
அந்த அன்புக்கு ஈடு இணை ஏது?

அளவுக்கதிகமாய் காதலித்தான்
இயலிசையை.
இருபத்தி நான்கு மணி நேரமும் அவன் உதடும்,
மனதும் அசைபோடும் ஒரே பெயர் “இயல்”
இயலின்றி இன்பமில்லை, இயலின்றி இச்சையில்லை,
இயலின்றி வாழ்கையே இல்லை, இயலின்றி எதுவுமே
இல்லை. இயல், இயல், இயல் மூச்சிக்காற்றில்
கலந்துவிட்டாள் அவள்.
கைபேசி மணி ஒலித்தது.
இயல்தான். “அலோ செல்லம்”

“ம்ம்ம் சார் என்ன சாப்டீங்களா?”

“ஏன். சாப்டலேனா சோறு போட போறியா?”

“வீட்டுக்கு வாங்க போடுறேன்”

“அப்புறம் வந்துருவேன்”

“தைரியமிருந்தா வாங்க” புன்னகைத்தாள்.

“வீட்ல அப்பா இல்ல?”

“ம்ம்ம்…. இல்ல்ல…”
என்று கூறி வெக்கத்தில் கைபேசியை
வைத்துவிட்டாள் இயல்.
இயல் ஊருக்கும் பொழிலன் ஊருக்கும்
ஏறத்தாழ 5 மைல்கள்.

நண்பன் ஒருவனிடம் மோட்டார் சைக்கிளை
வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
இயல் வீடு சென்றடைந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான்.

ஏதோ நீதிமன்றம் செல்வதை போன்று
பவ்யமாக சென்றான்.
சிவப்பு நிற சுடிதாரில் சுந்தரியாக காட்சி
தந்தாள் இயல்.
கபடமற்ற குழந்தையின் முக மலர்ச்சியோடு அவன்
வருவதை பார்த்து ரசித்துக்
கொண்டிருந்தாள்.

“உக்காருங்க”

“ம்ம்ம்… எ…ன்ன வரச் சொன்ன?”

“சரி நீங்க உங்க
பொண்டாட்டியைதானே பாக்க
வந்தீங்க? ஏதோ அம்மாவை பாத்த மந்திரி
மாதிரி நடுங்குறீங்க.”

“சரி சரி கேவல படுத்தாதே.”
குபுக்கென்று ஒரு சிரிப்பை தெளித்தாள்
இயல்.

“முதல்முறையா ஒரு பொண்ணு கூட
தனியா…”

“மறுபடியும் சொல்றேன். நான்
பொண்ணு இல்ல உங்க
பொண்டாட்டி”
உள்ளூர மனமகிழ்ந்தான்.

“சரி கொஞ்சம் தண்ணி
கொடு செல்லம்”
கொலுசொலி முழங்க
வசீகரமாக நடந்து சென்றாள்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவாறே வீட்டுச்
சுவற்றில் தொங்கவிடப்பட்ட
புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான், அவன் செவிகள் அவள்
வருகிறாளா என அவளின்
கொலுசொலியை கவனித்துக்
கொண்டிருந்தது.
ஒரு குவளை நீரோடு தேவதை போல வந்தாள்
பதட்டத்தோடு கையிலிருந்து நீரை வாங்கினான்.
கரங்களிரண்டிலும் லேசான உரசல். உடலில்
வெப்பம் மெல்ல பரவியது
பொழிலனுக்கு.”

“அப்பா எப்போ வருவாரு?”

“தெரியல. சந்தைக்கு போயிருக்காரு. ஒருவேளை
சாயந்திரம் ஆகும்”

“ம்ம்ம்… நான் வரட்டுமா?”
மனசே இல்லாமல். மனசுக்குள்
திட்டிக்கொண்டே

“ம்ம்ம்” என்றாள்.

“ம்ம்ம்… இயல்… ஒன்னு கேக்கணும்.”

“என்ன?”

“இல்ல… அது வந்து… இது வரைக்கும் இப்படி
ஆனது இல்ல. எப்படி கேக்குறதுனு தெரியல.
ஒரு பொம்பள புள்ளகிட்ட இத கேக்குறது
தப்புதான். ஆனா ஆசையா இருக்கு”

“என்ன முத்தம் வேணுமா?”

“புருவத்தை உயர்த்தினான். கற்பூர புத்தி
உனக்கு”

“அதெல்லாம் கிடையாது போங்க.எல்லாம்
கல்யாணத்துக்கு அப்புறந்தான். இன்னும்
ஒரு மாசம்தான இருக்கு.
அப்புறமென்ன?”

“போன்ல மட்டும் கொடுக்குற. இப்ப
மாட்டேங்குற”

“உங்களுக்கா கொடுத்தேன்?
போனுக்குதானே கொடுத்தேன்”

“சரி இன்னும் தாகமாதான் இருக்கு
கொஞ்சம் தண்ணி கொடு”

சொம்பு தண்ணீரோடு அருகில்
சென்றாள். தண்ணீரை வாங்குவது போல்
அவள் கரத்தை பற்றினான்.
செய்வதறியாது
“அய்ய விடுங்க யாராவது வந்திட போறாங்க
என்று கூறும்போதே இறுக அணைத்தான்.
அழுத்தமாக கன்னத்தில்
முத்தமொன்றை பதித்தான். இரு
உடல்களின் நெருக்கத்தால் இரத்த
நாளங்கள் பித்து பிடித்து விளையாடின.
இரு உடலும் ஒன்றையொன்று
பின்னிக்கொண்டன.
கோதையவள் இடையை பற்றினான், கோவை இதழை
கவ்வினான். இராட்சத ஆசை அவனை
விழுங்கும் நேரத்தில்.
“ச்சீ போதும் விடுங்க. என்ன இது அசுரத்தனமா?
போயிட்டு வாங்க அப்பா வந்திருவாங்க”
மனமே இல்லாமல்தான்
சொன்னாள்.

சரியென தலையசத்து கிளம்பினான்.
அன்று இரவு இருவருக்குமே உறக்கமில்லை. முத்த
சத்தமும், ஒட்டிய தேகமும் இருவருக்கும் மூளையில்
புரண்டு விளையாடி முழித்திருக்கச் செய்தது.
மூடிய கண்களுடன் விழத்துக்கொண்டு
இருந்தார்கள்…
“ஐயோ… இன்னும் ஒரு மாதம் உள்ளதே! இந்த
ஒரு ராத்திரிய தாண்டுறதே ஏழு கடலினை
தாண்டுறது மாதிரி இருக்குது இன்னும் முப்பது
நாட்கள் மூச்சு முட்டுதே ஆண்டவா…!
வாழ்கை என்றால் இதுதான் என மிகுந்த
மகிழ்ச்சியோடு நகர்ந்தது.

“ஏலேய் விசயம் தெரியுமா?”
பொழிலனின் தாய் ராகம்
இழுத்தாள்.’

” தெரியாது என்ன விசயம்மா?”

“ஒனக்கு பொண்ணு பாத்தோம்லா?
அவ அப்பங்காரன் போன் பண்ணினான்”
முகமலர்ச்சியோடு “என்னம்மா
சொன்னாரு?”

“அது ஒன்னுமில்ல. அந்த புள்ள நகை எல்லாம்
அடவு வச்சிருந்தானாம். தோட்டத்துல
ரெண்டாயிரம் வாழை போட்டுருந்தானாம். வெட்டுக்கு வர்ர நேரத்துல எல்லாம்
காத்துல முறிஞ்சி போச்சாம் வாழைய
குத்தகைக்கு கொடுத்துருப்பான் போல.
இப்ப குத்தவகாரன் பத்து பைசா தர முடியாது
உன் வாழைய நீதானே வச்சிக்க. தந்த
அட்டுவான்ச திருப்பி தா’னு கேக்கானாம்”
பொழிலன் முகம் மாறிது.”

“ம்ம்ம் பொரவு?”

தாய் தொடர்ந்தாள்
“ஏற்கனவே கூட்டுறவுல நெறயா கடன்
இருக்குதாம். இந்த வாழைய நம்பிதான்
கல்யாணத்த பேசியிருக்கான். இப்ப பேங்கு
காரன் கடன கட்ட
சொல்றானாம், வாழையும்
எல்லாம் சீரழிஞ்சி போச்சு. பாவம் என்ன
செய்யனு தெரியாம கல்யாணத்த
அப்புறம் வச்சுகிடலாம்னான்”

“நீ என்ன சொன்ன?” கோபமாக
கேட்டான் பொழிலன்.

“நான் கல்யாணத்துக்கு இன்னும் இருவது
நாளுதான் இருக்கு.
சொந்தகாரவக கிட்டலாம்
சொல்லியாச்சு. இனி ஒன்னும்
செய்ய முடியாது
எங்கனயாவது கடனவுடன பாத்து
கல்யாணத்த நடத்துனு சொன்னேன்.”

“லூசாம்மா நீ?
கொஞ்சநாள்கழிச்சி கல்யாணம்
பண்ணா நா ஒண்ணும்
கெழவனாயிர மாட்டேன்”
என அருகிலிருந்த நாற்காலியை மிதித்து
தள்ளிவிட்டு வேகமாக வெளியேறினான்.
தன் சட்டைப்பையில கைபேசியை தேடினான்.
இல்லை.
“ஓ… அரங்கு வீட்டுக்குள்ள சார்ச் குத்தி போட்டேன்
மறந்துட்டேன்” வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
கைபேசியை கைப்பற்றினான்.
திரையை நோக்கினான். இயலிசையிடமிருந்து
குறுந்தகவல் ஒன்று வந்து கிடந்தது.
திறந்து நோக்கினான்.

” என்னங்க, பல தலைமுறையா ஊருக்கெல்லாம் சோறு
போட்ட விவசாயி இன்னைக்கு தான் சாப்பிட
வழியில்லாமல் சாவத் துணிகிறான். நம்
நாட்டோட கேடுகெட்ட இந்த இழிநிலைக்கு
பரம்பரை விவசாயியான என் குடும்பமும்
தப்பவில்லை.
தலைமுறை தலைமுறையாக வளமும் வாழ்வும்
கொடுத்த இந்த பூமி என் தலைமுறையோடு
ஓய்வெடுக்க சென்றுவிட்டது. பூச்சிக்
கொல்லி மருந்துகளை மண்ணில்
ஊற்றியதற்கு கூலியாக மண் மனிதனை
கொல்லும் ஆயுதமாக மாறிவிட்டது.
மாற்றிவிட்டார்கள்.
எல்லோரையும் போல என் தந்தையும் நிலத்தை
காற்றாலை நிறுவனங்களுக்கு
சொர்ப விலைக்கு
கொடுத்திருந்தால் கூட இன்று
சொகுசாக வாழ்ந்திருக்கலாம்
போல. எதற்கும் அஞ்சாமல் மீசையை முறுக்கி சுடலை
மாடன் போல கம்பீரமாய் தோன்றும் என் தந்தை
இன்று கவிழ்ந்து அழும் அவலத்தை என்னால்
கண்கொண்டு காண இயலவில்லை.
ஒருவேளை நான் இல்லாவிட்டால் இன்றும்
அதே கம்பீரத்தை கடைபிடித்திருக்கலாம்.
பணம்தானே இங்கு அனைத்தையும்
தீர்மானிக்கிறது. ஒருவேளை பணத்தின்
பாதிப்பினால் நம் திருமணம் தானே
தடைபடுவதை விட எனக்கு இம்முடிவு
நல்லதாய்ப்படுகிறது.
நான் எடுத்த இந்த முடிவு உங்களை
பொருத்தவரை பாதகம்தான்.
ஆனால் பெற்று வளர்த்த தந்தைக்கு
பாரமாக இருப்பதற்காக இந்த பாதகத்தை
செய்கிறேன். இந்த பாதகத்தியை
மன்னித்துவிடுங்கள்.
என் அப்பாவின் கதறலை என்னால் சகிக்க
இயலவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்,
விடுங்கள். எப்போதும் சொல்வதைதான்
சொல்கிறேன். நான் உங்களுக்கு
பார்த்த பொண்ணு இல்லை உங்கள்
பொண்டாட்டி. வருகிறேன்.
கண்டிப்பாக வருவேன்.”
இயல் எண்ணுக்கு பல முறை அழைத்தான்.

“நீங்கள் தொடர்புகொள்ளும்
வாடிக்கையாளர் எண் அணைத்து
வைக்கப்பட்டுள்ளது”
என கணினிப்பெண் மீண்டும் மீண்டும்
பேசினாள்.
இதயத்தில் வெந்நீரை காய்ச்சி ஊற்றியது
போலிருந்தது பொழிலனுக்கு. என்ன
செய்வதென்று தெரியவில்லை.
தன் நண்பனை அலைபேசியில்
தொடர்புகொண்டு மோட்டார்
சைக்கிளை எடுத்து வரச் சொன்னான்.
இருவரும் வேகமாக இயல் வீடு
சென்றடைந்தனர். வீடு முழுக்க மக்களால்
நிறைந்திருந்தது. ஒப்பாரி ஓசை
வெகுசத்தமாக கேட்டது.
உடல் நடுக்கம், இதய வலி,
“இயல் உனக்கு ஒன்னும் ஆயிருக்காது” என்று
உள்மனதில்
சொல்லிக்கொண்டே… மக்களை
விலக்கி உள் சென்றான்
நாற்க்கட்டிலில் சிவப்பு நிற சுடிதாரோடு
சடலமாக கிடந்தாள் இயல்…

“நான் பட்ட கடனுக்கு எம்பிள்ள தூக்கு
போட்டுருச்சே… நானே எம்பிள்ளய
கொன்னுட்டேனே…” என இயலிசையின்
தந்தையின் கதறல் காண்போரை எல்லாம்
உலுக்கியது.

“அடி பாவி. என்னய அவ்ளோ
கேவலமானவன்னா நெனச்ச? கேவலம்
பணம்தானட்டி. இதை எங்கிட்ட ஒரு வார்த்த
சொல்லணும்னு தோணலயா உனக்கு?
இப்டி அவசரப்பட்டு தூக்கு போட்டு என்னய ஒரே
அடியாதூக்கி போட்டுட்டுட்டியேடி” என அவ்வப்போது
கண்ணீரால் கரைந்தான் பொழிலன்.

உயிரோடு இறந்துவிட்டான் பொழிலன்.
கோமா நிலையிலுள்ளவன் போன்று பல மாதங்களை
கழித்துவிட்டான்.

“இயலு, எல்லோரும் உன்னய செத்து
போயிட்டனு சொல்றாங்க. ஆனால்
என்னால ஏன் அதை நம்பவே முடியல? பல பேரு
கூடி நின்னு கூப்பாடு போடுறாங்க, உங்க
அப்பா தலையில அடிச்சி அழுறாரு, ஆனாலும்
என்னால நம்பவே முடியல. அந்த சிவப்பு கலரு
சுடிதாருல மல்லாந்து படுத்து அசந்து தூங்கிட்டு
இருக்கனுதான் இப்பயும் நினைக்க தோணுது.
எல்லோரும் அவ இனி வரமாட்டானு
சொல்றானுவ. ஆனா என்னால
அப்டி நினைக்கவே முடியல. திடீர் திடீர்னு
காதுக்குள்ள வந்து ஏதோதொ பேசுற.
அப்புறம் காணாம போயிடுற. வந்துரு
செல்லம். எனக்கு தெரியும் நீ
வந்துடுவ. நீ இல்லாம ரொம்ப
கசுட்டமா இருக்குதுட்டி வா. இங்க பாரு
எனக்கு வெவரம் தெரிஞ்சி நான்
எப்போ அழுதேன்னு கூட நெனவு இல்ல.
ஆனால் இப்ப எதுக்குனே தெரியல தேவையே
இல்லாம கண்ணீரா சாடுது.”
பல நாட்களாக பொழிலன்
தனிமையில் புலம்புவது இப்படிதான்.

“பொழிலா, உன்னால் இதை கடந்து
செல்ல இயலும். எழு, நீ இவ்வாறு
இருப்பதை உன் இயல் ஒருபோதும்
விரும்பமாட்டாள், எழு, உக்காரு, நட, ஓடு,
அழு, சிரி, பேசு, எழுது, படி, கற்பி, கடரு, எதையாவது
செய், தயவுசெய்து ஒரே இடத்தில்
தேங்காதே” என உள் மனம் எவ்வளவோ ஆறுதல்
கூறியது பொழிலனுக்கு.
காலம் அனைத்திற்கும் அருமருந்து. அனைத்தையும்
மாற்றக்கூடியது.
தன் தாய், நண்பர்கள், கோவில்கள்,
மருத்துவர்கள் என பல கட்ட முயற்சிகள்
பொழிலனைய சிறிது சிறிதாக மாற்றி
மீண்டும் ஒரு திருமணத்திற்கு திடப்படுத்தியது.
______________________________________
நிகழ்காலம்
பொழிலனுக்கு கண்ணீர் தாரை
தாரையாக வழிந்தது. எதையும்
யோசிக்காதவனாய் அந்த உருவத்தை நோக்கி
சென்றான். அருகில்
சென்றுவிட்டான். இயலின் பாதத்தை
தொட்டு கதரி அழுவதென
உத்தேசம்.
அருகில் சென்றான். அந்த உருவம் அதே
சிரிப்புடன் அதே இடத்தில் நின்றது.

“இயல்… இயல்…”

உருவத்திடம் சிரிப்பை தவிர வேறேதும் இல்லை.

“இயல் என்னய மன்னிச்சிரு…”

அந்த உருவத்தின் முகத்தை இரு கையால்
பற்றினான். அது திமிரியது. இவன்
விடுவதாயில்லை.
முகத்தை மூடியிருந்த கூந்தலை விலக்கினான்.
முகத்தை உற்று நோக்கினான். அதிர்ந்தான்.
இது என் இயல் இல்லை. யோசித்தான். யார்
இது? அதே அச்சம் மனதில்.
யோசித்தான் லேசாக உருவம் பிடிபட்டது. இது
சில ஆண்டுகளாக சித்த பிரமையால்
பாதிக்கப்பட்ட பக்கத்து தெரு
இளம்பெண் என்பதை
அறிந்துகொண்டான்.
சட்டென கையை
விலக்கிக்கொண்டான். அந்த
மனநிலை பாதிப்படைந்த பெண் அவனை விட்டு
சற்றே அகன்றாள். ஆயினும் அதே சிரிப்பு.

“நான் அவ இல்லப்பா… ஆனா அவ
வருவா. கண்டிப்பா வருவா” என
சிரித்தபடியே எங்கோ பார்த்து கூறினாள்
அப்பெண்.

மெல்ல நகர்ந்து சென்றான்.
பொழிலனின் பேரச்சம் பேசாமலே
சென்றுவிட்டது.

அப்பெண் கூறியது போலவே இயல் ஆண்டு
கழித்து வந்தாள். பொழிலனின்
பெண் குழந்தையாக…
ஆம்… பொழிலனின் குழந்தையின்
பெயர் இயலிசை…

(முற்றும்)

நன்றியுடன்

செ_இன்பா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s